Thursday, March 19, 2009

நான் கடவுள் - கருத்துப் பதிவு

இந்த திரைப்படம் பற்றிய எனது கருத்துகளை பதிவு செய்வதற்கு முன்,பாலாவோடு எனக்குள்ள உறவையும்,அவரது படைப்புகளோடு எனக்குள்ள இனக்கத்தையும்,இந்த திரைப்படத்தைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளையும் நீட்டி முழக்காமல் சொல்லி விடுவது என விரும்புகிறேன்.
முதலில் பாலா
இவரோடு எனக்குள்ள உறவு,உணர்வுகளின் வழியே பிண்ணப்பட்ட ஒன்று.ஏகலைவன் துரோணரிடம் முகம் பார்க்காமல் பயின்றது போல்,என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவருடைய படைப்புகளில் விடை தேடிக் கொள்கிறேன்.இவரைப் பற்றியும்,இவரோடு எனது உணர்வுகளையும் தனியாகப் பதிவு செய்ய விழைகிறேன்.So Iam stopping it here.
அடுத்து நான் கடவுள் மீது எனது எதிர்பார்ப்பு
அஹம் ப்ரமாஸ்மி-நான் கடவுள் என்பது இந்து சனாதான தர்மத்தின் அடிப்படை மூலம்.4 வேதங்களும்,12 உபநிடதங்களும் இந்த கூற்றை நேரிடையாகவும்,கீதை மறைமுகமாகவும் அறிவிக்கின்றன.கோயில்களும்,பல கடவுள்களும் வெறும் தியானத்திற்காகவே அன்றி அவை அனைத்தும் வெறும் கற்பனை உருவங்களே.
"உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரம்மென் றேமறை
கூவுதல் கேளீரோ?"
என்றும்,இன்னும் பல் வேறு பக்திப் பாடல்களிலும் ஆன்மாவைக் கடவுளாக(அதன் மூலம் ஒவ்வொரு தனி உயிரும் கடவுளாகின்றன)அறிவித்து ஓய்ந்து போனான் பாரதி.பாரதியைப் பற்றியும்,அவனது தத்துவ,ஆன்மீக அறிவைப் பற்றி மற்றொரு நாள் எழுத எத்தனிக்கிறேன்.ஆக,கடவுளைப் பற்றிய எனது கேள்விகளுக்கு விடை தரும் என்ற நம்பிக்கை இப்படத்தின் மேல் எனது ஆர்வத்தை தூண்டி இருந்தது.தற்செயலாகவோ,எப்படியோ எனது வாழ்வில் என்னை யோசிக்கத் தூண்டிய "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே"(பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்த ரமண மாலை.இந்த பாடலின் வரிகளைக் கேட்டு என் உணர்வுகள் எல்லைகளைத் தாண்டி இருக்கின்றன)என்ற பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுவது தெரிந்து மிகுந்த ஆர்வம் உற்றேன்.மேலும் சித்தர்கள் மீதும் அவர்கள் கருத்துகள் மீதும் அளவு கடந்த அபிமானம் எனக்கு உண்டு.இப்படத்தைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளுக்கான காரணங்களை இதற்கு மேல் விவரிக்க வேண்டாம் என முடிவு செய்து இத்தோடு முடிக்கிறேன்.இனி,படத்தைப் பற்றி..........
நான் கற்பனை செய்து வைத்திருந்த கேள்விகளுக்கு ஒவ்வாமல் இருந்த போதும்,படைப்பளியாக பாலா ஒரு அரிய இடத்தை,வாழ்க்கையின் விளிம்பை,அதன் குரூரத்தை,அதன் ஆனந்ததை எனப் பலவிதமாக பரிமானித்துக் காட்டி இருக்கிறார்.நிதர்சனமான உண்மைகளை இயல்பாக காட்டிய விதம் பலருக்கு அருவருப்பையும்,சிலருக்கு அதிசயத்தையும் கொடுத்துள்ளது.வெகு சில பலஹீனமானவர்களுக்கு ஆர்யாவின் தோற்றம்,பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கைத் துயரம் படத்தைப் பார்க்க முடியாத உணர்வை கொடுத்துள்ளது."Dark Reality" என்று கூறப்படுகிற வன்முறையான் உண்மைகளை களமாக வைத்து படைப்புகளை படைக்கும் இயக்குனர்கள் உலகில் மிகக் குறைவே.அகிரா குரோசோசவாவின் படைப்புகளில் இருக்கும் அழுத்ததை பாலா கொடுக்க முனைந்திருக்கிறார்.வெற்றியும் பெற்றிருக்கிறார்.
சில எழுத்தாளர்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர்.பலர் பதிவு செய்ய மறுக்கும் விஷயங்களை பதிவு செய்வதாலேயே ஒரு படைப்பு சிறந்த படைப்பாகாது என்பதும்,இந்த படம் just romanticizes poverty என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.ஆனால் என் கருத்து - Slumdog Millionare romanticizes and exploits poverty whereas Naan Kadavul does not do that......
இந்த படம் ஒரு ஆன்மீகப் படமல்ல.ஆன்மீகத்தையும் கடவுளையும் தேடுகிற படம்.வாழ்வு,பிறப்பு,இறப்பு என்ற அடிப்படை தத்துவங்களை ஆராய முயல்கிற படம்.அழுகை,மகிழ்ச்சி,கோபம்,பசி என்ற மனித உணர்வுகளை ஆழச் சென்று பார்க்கின்ற முயற்சி.கை,கால்,கண்,வாய்,முகம் என்ற மனித உறுப்புகளின் வேறுபட்ட தன்மைகளை பதிவு செய்கின்ற முயற்சி.வாழ்க்கையின் இரு விளிம்புகளில் வாழும் மனிதர்களை ஒன்று சேர்க்கின்ற முயற்சி.கடவுளைப் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் சொல்கின்ற படம்.மரணத்தின் புனிதத்தையும் அதன் அசிங்கத்தையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த படைப்பாளியின் படைப்பு.
திரைக்கதை என்று பொறுத்த வரை,பாலா தனது முந்தைய படைப்புகளின் உத்தியையே கையாண்டிருக்கிறார்.சிறு வயதிலேயே ஒருவனை சமூக வாழ்க்கையில் இருந்து பிரித்து,அவனுக்கு கிடைக்க வேண்டிய உறவுகளின் உணர்வுகளை மறுத்து,பிறகு காலம் கழித்து அவனை சமூகத்தில் சேர்த்து விட்டு அவன் பார்வையில் கதையை நகர்த்தும் பாணியை மாற்றாமல் கடைபிடித்திருக்கிறார்.நந்தாவில் சூர்யாவை சிறுவர் சிறைச்சாலையிலும்,பிதாமகனில் விக்ரமை மயானத்திலும் விட்டவர்,நான் கடவுளில் ஆர்யாவை காசியில் வளர விடுகிறார்.அதன் மூலம் ஆர்யாவை சமூக வாழ்வில் இருந்து பிரித்து விடுகிறார்.அகோரியாக வளரும் ஆர்யாவின் மூலம் காசியின் மற்றொரு பரிமானத்தை எடுத்துரைக்கிறார்.பின்பு ஆர்யாவை சராசரி மனித வாழ்வில் புகுத்தி வாழ்வின் நிதர்சனத்தை படம் பிடித்திருக்கிறார்.
இசையில் இளையராஜா காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.காசியின் பிண்ணணியில் ஒலிக்கும் குனாலின் "மா கங்கா காசி பதாரி" மனதைப் பிசைகிறது(இந்தப் பாடல் இளையராஜாவின் பாடல் அல்ல.இது ஒரு பஜன்).ஆனால் அதன் பின்னர் வரும் 'ஓம் சிவோஹம்" நாடி நரம்புகளில் உக்கிரத்தை ஏற்றுகிறது.மற்ற பாடல்களிலும்,பிண்ணணி இசையிலும் இளையராஜா காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.மேலும் மிகுந்த சிரத்தை கொள்ளாமல் தனது பழைய "மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்"பாடலை பதிவு செய்திருக்கிறார்.பிண்ணணி இசையிலும் தனது இசை ஞானத்தை தெளிவு படுத்தியிருக்கிறார்.சங்கு,உடுக்கை என மிரட்டியிருக்கிறார்.
"புளுத்தினான்..தேவடியா மகன்.."என்று கடவுளை சாடும் வசனத்தில் கடவுளின் மேல் எளியவர்களுக்கு ஏற்படும் கோபத்தை பதிவு செய்த ஜெயமோகன்,"நெருப்புக்கு ஏதுடா சுத்தம் அசுத்தம்","தோமைன்னா என்னன்னு தெரியுமில்லடி","வாய் திறக்காத,கண் பார்க்காத சாமி என்னடா சாமி","அம்பானி செல்பேன் விக்கறவண்டா" என்ற வசனங்களில் தனது இலக்கிய அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார் .மற்ற படங்களில் தானே வசனம் எழுதிய பாலா இந்த படத்தில் ஜெயமோகனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.அதை ஜெயமோகனும் செவ்வனே செய்திருக்கிறார்(ஜெயமோகனின் ஏழாம் உலகத்தின் தழுவலே நான் கடவுள்).படத்தின் இறுதிக் காட்சிகளில் பூஜாவின் வசனங்கள் கடவுளை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
ஆர்யா,பூஜா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக இயல்பாக படைக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் இந்த படம் என் மன உணர்வுகளின் ஆழம் சென்று என்னை அசைத்துப் பார்த்து விட்டன.எங்கள் ஊரில்,நான் வசித்த தெருவில் நகை செய்யும் ஆசாரிகள் அதிகம்.அவர்கள் குப்பை என்று சாக்கடையில் வீசும் குப்பைகளை களைந்து அதில் கிடைக்கும் குண்டுமணி தங்கங்களை நம்பி பல குடும்பங்கள் எங்கள் தெருவில் வசித்து வந்தன.அவர்களுக்கென்று தனி வீடோ வாசலோ கிடையாது.அவர்கள் பிச்சை எடுத்தே வாழ்ந்தனர்.ஒரு நாள்(நினைவு தெரிந்து அப்போது நான் 11-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்)நான் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த குடும்பத்தை சேர்ந்த மனிதன் ஒருவன் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்த தோசை ஒன்றை ஊதி தின்று கொண்டிருந்தான்.வாழ்க்கையைப் பற்றிய எனது எண்ணங்களை மாற்றிப் போட்ட சம்பவம் அது.அப்பொழுது அம்மனிதனுக்காக பரிதாபப்பட்ட நான்,இப்பொழுது அவன் எறும்பகளின் உணவை பறித்துக் கொண்டான் எனவே எண்ணுகிறேன்.நாம் அனைவரும் அடுத்தவரின் உணவை பறித்தே வாழ்கிறோம் என எண்ணுகிறேன்.நம் அனைவரின் வாழ்க்கையையும் "தாண்டவன்" கதாபாத்திரத்தின் மூலம் பாலா செதுக்கியிருக்கிறார்.
மொத்ததில் "நான் கடவுள்" திரைப்படத்தை,அதன் ஆக்கத்தை 1994-ல் புலிட்சர் விருது பெற்ற ஒரு புகைப்படத்டோடு ஒப்பிட விரும்புகிறேன்.
புகைப்படம்

பசியின் எல்லை தாண்டிய கோரத்தில் இருக்கும் ஒரு குழந்தையை அது இறந்து விடும் என எண்ணி தன் உணவாகக் கொள்ள காத்திருக்கிறது ஒரு கழுகு.அந்த குழந்தையைக் காப்பாற்ற முயலாமல் அக்காட்சியை படம் பிடித்துருக்கிறார் ஒரு புகைப்படக்காரர்.நாமெல்லாம் அந்த கழுகாகவும்(தாண்டவன்),அந்த குழந்தை நாம் தினமும் காணும் பிச்சைக்காரர்களாகவும்(பூஜா),இந்த காட்சியை கண்டும் அதை தவிர்க்காத புகைப்படக்காரராக கடவுள்(ஆர்யா) என பாலாவின் வாழ்க்கை விவரிப்பு ஒவ்வொரு மனிதனின் செவிட்டில் அறைந்தது போல இருக்கிறது.
இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி எழுத என்னால் முடியவில்லை....I am sorry...I have no words

No comments: