Saturday, March 14, 2009

மரணமே நின்னை காதல் கொள்வேன்


“மரணம்” - இந்த வார்த்தை எந்த நிலையில் இருக்கும் மனிதனையும் ஒரு வினாடியேனும் நிலை பிறழ செய்யும்.அதன் ஆளுமை மனித அறிவிக்கு அகப்படாமல் அவனை நகையாடித் திரியும் தன்மையைக் கொண்டது.பூமிக்கு அப்பாலும் தன் அறிவினை செலுத்தி அண்டங்களின் புதிர்களை எதிர்த்து நிற்கும் மனிதனின் ஒரே எஜமானன் மரணம் மட்டுமே.ஒரு சிறு பிள்ளையின் கையில் இருக்கும் விளையாட்டு பொம்மையை ஒத்தே மனிதன் மரணத்தின் பிடியில் இருக்கிறான்.மரணம் எனும் அந்த குழந்தை,மனிதன் எனும் இந்த பொம்மையை வைத்து சலிக்கும் வரை விளையாடி விட்ட பின் வீசி எறிந்து உடைக்கின்றது.
ஆனாலும் மரணத்தைப் பற்றிய புரிதலில் மனிதன் சிறு குழந்தையின் நிலையில் தான் இருக்கிறான்.மரணத்தின் ஆளுமையை அவன் உணரும் தருணங்கள் மிக குறைவே.சமூகம் என்னும் மனிதக் கடலில் ஒரு துளியாக விளங்கும் ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் தன் நெருங்கிய,அயல் உறவுகளும்,தான் பழகிய மனிதர்களும்,அண்டை வீட்டினரும் என்று வகைப்பட்ட மனித உயிர்கள் இறக்கும் போது அதன் ஆளுமையை புரிந்து வியக்கிறான்.புரிந்து கொள்ள முயல்கிறான்.பீதி அடைந்து வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்கிறான்.ஆனால் இந்த உணர்வு அந்த மரண நிகழ்வின் போதும் அதன் பிறகு அந்த மரணத்தின் நிமித்தமாக செய்யும் காரியங்களின் போதும் மட்டுமே மனிதனிடம் தங்குகிறது.பிறகு வாழ்வின் நிலையற்ற தன்மையை மறந்து தனக்காக,புலன்களால் செலுத்தப்பட்டு கீழ்நிலை இன்பத்திலே நிலை கொள்கிறான்.
தன் வாழ்வின் முழு அதிகாரமும் தன்னிடம் இல்லை என்பதை மறந்து வாழும் வாழ்க்கையே சராசரி மனிதனின் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.கனவுகளும் அதன் பயன்களும்,புலன்களின் இன்பங்களுமே அந்த வாழ்க்கையின் அம்சங்களாக முந்தி நிற்கின்றன.தான் மரணத்தை நோக்கிப் பயனிக்கிறோம் என்பது ஒரு மரண நிகழ்வின் போது மட்டுமே அவன் மனதில் வந்து மறைகிறது.அவன் வாழ்வின் எச்சங்களாக எஞ்சி நிற்பவை காமம்,அச்சம்,குரோதம்,பொறாமை.அவன் வாழ்வு முழுதும் தனக்காக தன் ஆசைகளின் விளைவுகளையே முன்னிறுத்தி ஓடுகிறான்.
தன் வட்டத்துக்குள்ளேயே வாழ விரும்பும்,தன் ஆசைகளையே தீர்த்துக் கொள்ள வாழும் வாழ்க்கை மரணத்தோடு பழகும் போது,அதனோடு அந்நியோன்யம் கொள்ளும் போது,அதனையே நினைத்து வாழும் போது விலகிச் சென்று விடும்.மரணத்தின் நித்தியத்தையும்,அதன் ஆளுமையையும் புரிந்து கொள்ளும் போது மட்டுமே இந்த சமூகத்தின் பிரச்சனைகள் தீரும்.சூன்யத்தில் நிலைக்கும் இன்பத்தை மனிதன் உண்ர்ந்து வாழ வேண்டும்.மரணத்தோடு காதல் கொண்டு அது தரும் சுகத்தில் நிலைக்க முயலும் போது,மனித வாழ்க்கை ஒரு புதிய பரிமாணம் கொள்ளும்.மரணமே..நீ வாழ்க!!!

No comments: