Sunday, December 19, 2010

உன்னுள் மோட்சம் கொள்கிறேன்

அன்புள்ள  நாஸ்தென்கா,
இந்த அற்புதமான உலகின் மனிதர்களெல்லாம்,இறைவனின் மிகச் சிறந்த படைப்பான இயற்கையின் எல்லைகளை மீறி இயங்குவது எதனால்?சக மனிதனை நேசிக்க மறந்து,மரணத்தை மீறி இயங்குவது எதனால்?ஆழ் மனதின் நினைவுகளில் இருந்து எழும் கேள்விகளுக்கு விடை காண முயன்று நான் தோற்று விழுவது எதனால்?வாழ்க்கையின் பின்னல்கள் அனைத்தும் ஒரு சிலந்தியின் வலையைப் போலவே இருக்கிறது.சிலந்தி வலையின் ஏதோ ஒரு மூலையில் வந்து விழும் தூசியின் அதிர்வுகள் சிலந்தியின் இருப்பினை ஆக்ரோஷமாக அசைப்பது போலவும்,ஒரு நெடிய அமைதியான சூழலின் உறக்கத்தில் ஒரு கோயில் மணியின் சப்தம் இதயத்தில் வலி ஏற்படுத்தி முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து சென்று மூளையில் சுரீரென குத்துவது போலவும்,என் இருப்பிலும் இதயத்திலும் சலனம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு மாலை நேரத்தில் நீ வந்தாய்.அந்தி மயங்கும் நேரத்தில்,சூரிய உதயத்தை விடவும்,நிலவின் மயக்கத்தை விடவும்,அதிகம் ரம்மியத்தைக் காண்பவன் நான்.பறவைகளும்,மக்களும்,விலங்குகளும் தங்கள் கூட்டை நோக்கி ஓடும் நேரமது.வெயிலின் வெப்பம் குறைந்து,குளிர்ந்த காற்று வீசி,மேய்ச்சலுக்குப் போன ஆடுகளும்,மாடுகளும்,கோழிகளும் மந்தைகளாக பட்டிகளை நோக்கி ஓடும் நேரமது.சலசலத்து கூழாங் கற்கள் மேல் தன் சப்தத்தை எழுப்பியபடி,கரையோர நாணல்களை வளைத்து,காற்றை ஈரமாக்கி ஓடும் நதிகளின் நீரில்,மங்கிய தன் ஒளிக் கற்றைகளை வீசி நீரினை இளஞ் சூடாக்கி பூமிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் சிவந்த மஞ்சள் வண்ணத்தினால் மேகங்கள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக சிவந்து கிடக்கும் நேரமது.ஆர்ப்பாட்டங்கள் அடங்கி ஒரு பேரின்ப மயக்கமான அமைதி எல்லாத் திசைகளிலும் வியாபித்து கிடக்கும் இந்த நேரத்தில் நீ வந்தாய்.

நாஸ்தென்கா...தனிமையின் அமைதியில் இன்பம் இருக்கும் அதே அளவில்,மிக குரூரமான,ஆன்மாவைக் குலைக்கும் சக்தியும் இருக்கிறது.இந்த தனிமையின் துயரத்தில் நான் கரைந்து கொண்டிருந்த நேரத்தில் தான் நீ வந்தாய் .பசியில் கத்தி,அம்மாவின் முலைக் காம்புகளை தேடி வாயில் வைத்து,அவள் இடுப்பில் அமைதியாக நிறைவுடன் தஞ்சமென அமரும் ஒரு சிறு குழந்தையைப் போலவே என் மனம் உன்னை நோக்கி ஓடியது.பாரதியின் சாக்தமென சக்தியின் வழிபாட்டை உன்னிடம் கண்டேன்.பராசக்தியாக,மகா காளியாக,என் மோட்சத்தின் வழியாக உன்னைக் கண்டு உருகி நின்றேன்.கல்லறைகளின் குழிகளில் உடைந்து கிடக்கும் மண்டை ஓடுகளில்,மெல்ல ஊர்ந்து செல்லும் கொடிய நாகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்த மனம் அன்று தான் அந்த கல்லறைகளின் ஓரங்களில் பூத்துக் கிடந்த மலர்களையும் பார்க்கப் பழகிக் கொண்டது.உன்னை காதலிக்க ஆரம்பித்த நொடிகளில்,அந்த மாலையின் மயக்கத்தை விடவும்,மனம் மயங்க ஆரம்பித்த நேரமது.வாழ்வின் வினாடிகள் அனைத்தும் புதியதாக உருவம் பெற்று நின்ற நேரமது.இந்த பிரபஞ்சத்தின் எல்லை இல்லாத அழகையும்,படைப்பின் பேரியக்கத்தையும் உனக்குள் நான் கண்ட நேரமது.காலையின் இளவெயிலில் மெல்லிய காற்றில் குளிருக்கு இதமாக கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டே ஒரு கோப்பைத் தேநீரைத் தேடி காற்றில் பறக்கும் பறவையைப் போல நடந்து திரிகிறேன்.எல்லையற்ற அந்த வானத்தின் எல்லைகளை அளந்து விடுவது போல ஒரு வானம்பாடி பறவை,தனக்கும் அந்த வானத்துக்கும் உள்ள காதலை பாடிக் கொண்டே செல்கிறது.காற்றில் கரைந்து விடும் ஒரு பறவையின் மெல்லிய உடலைப் போல,என் மனமும் பாரம் நீங்கி இயற்கையின் பேரழகில் கரைந்து விடுகிறது.உலகின் அழகியல் காட்சிகள் அனைத்தும் உன் கண்களின் வழியே வெளிப்படுகிறது.ஈரம் தங்கி விட்ட ஒரு நிலத்தில்,கால்களில் செருப்பை அணியாமல்,ஒரு ஓங்கிய பனை மரத்தின் நுங்கை கைகளால் நக்கி நக்கி விழுங்கும் ஒரு சிறுவனைப் போல ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளை நினைத்து நினைத்து மகிழ்ந்து கிடக்கிறேன்.

நாஸ்தென்கா...மரங்களில் எனக்குப் பிடித்த எலுமிச்சை மரங்களின் வாசமும்,பூக்களும் நிறைந்து கிடந்த ஒரு எலுமிச்சை தோட்டத்தில் அமர்ந்து வெறித்துக் கிடந்த வானத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தேன்.உடைகளை எல்லாம் களைந்து விட்டு உன்னைப் புணர்ந்து,உன் உடலின் சதைகளையும்,வாசத்தையும்,நாற்றத்தையும்,வனப்பையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்த வினாடிகள் அனைத்தும் இருண்டு கிடந்த வானத்தில் மின்னிய நட்சத்திர சிதறல்களில் காட்சிகளாக நிறைந்து கொண்டிருந்தன.நிலவின் ஒளியில் குளித்து,அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மொத்த உலகமும்,என் உடலை தன் அமைதியால் எரித்துக் கொண்டிருந்தன.எங்கிருந்தோ திரண்டு வந்த மேக கூட்டமொன்று என் மேல் பொழிந்து என் வெப்பத்தை அணைத்து  விட்டுப்  போனது.இப்படியே ஒவ்வொரு இரவுகளும் அமைதியிலும்,வெப்பத்திலும்,தனிமையிலும் என்னை சிதைத்துக் கொண்டிருந்தன.சிதறி ஓடும் எண்ணங்களை,ஒழுங்குபடுத்தி தன் கைகளில் வழியே எழுத்துக்களால் பதிவு செய்வது ஒரு எழுத்தாளனுக்கு எவ்வித வலியைக் கொடுக்குமோ,அதனை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் தான் அவனைக் கண்டேன்.நடு நிசியில் பிச்சைக்காரனைப் போல் சுற்றி கொண்டிருக்கும் அவனை யாரென்று கேட்டேன்.ஈசன் என்று கூறினான்.நம்ப மறுத்த போது,தன் சடா முடியையும்,கழுத்தில் புரண்டு நெளிந்து கொண்டிருந்த பாம்பையும் எனக்கு காட்டினான்.மயானத்தில் தவம் செய்ய சென்று கொண்டிருந்த அவனுடன் நானும் சென்றேன்.இரவுகளில் மயானத்திற்கு செல்லும் ஆசை ஒன்று என் மனதுக்குள் சிறு வயது முதலே இருந்து கொண்டிருந்த ஒன்று.மோட்சத்தின் வழி எது என்று நான் கேட்ட போது,எரிந்து சாம்பலாகி அவன் உடல் மேல் உறையும் போது நான் மோட்சம் அடைவேன்  என்றான்.எரியும் சடலத்தின் முன் நின்று அவன் ஆடிய ஆட்டத்தைக் கண்ட போது எனக்கு ஏற்பட்ட திக் பிரமையின் காரணமாக வார்த்தைகள் உறைந்து போய் விட்டன.உறைந்து விட்டிருந்த வார்த்தைகளை உருக்க முயற்சித்தபோது என்னை எட்டி உதைத்து கீழே என் நெஞ்சின் மேல் ஏறி நின்று பிரபஞ்ச தோற்றத்தின் ஆக்ரோஷமான நடனத்தை ஆடி முடிக்கிறான்.எலும்புகள் அனைத்தும் நொறுங்கி,உடல் அழிந்து,பாரம் இழந்து நீராக உருகிக் கிடந்த என்னை தன் கைகளால் அள்ளி திசைகளெங்கும் வீசி எறிகிறான்.காற்று என்னை தனக்குள் வாங்கிக் கொள்கிறது.உடலுக்குத்தான் எல்லைகள் உண்டு.உடலற்ற நிலையில் எல்லைகள் தாண்டி உணர்ந்தேன்.காற்று என்னைத் தங்கிச் சென்று என் நாச்தேன்கா விடம் சேர்த்தது.அவள் உடலுக்குள் நான் உறைந்து போனேன்.காற்றாக,நீராக,நெருப்பாக,உணர்வுகளாக,நினைவுகளாக அவள் உடலுக்குள் உறைந்து போனேன்.சிவன் அளிக்கும் மோட்சத்தை விட,இதுவே சிறந்த மோட்சம் என்று உணர்ந்து கொண்டேன்.....

Wednesday, December 15, 2010

மரணம்

எல்லையில்லாமல் விரிந்து செல்லும்
இருளின் கைகளுக்குள்
பிடிபடாமல்
மிதந்து கொண்டே இருக்கிறேன்

ஒளி ஒளியாய்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன

கடற்கரை மணலில்
சிப்பியைத் தேடும்
சிறுவனைப் போல்
இருளின் எல்லா திசைகளிலும்
நட்சத்திரங்களைப் பொறுக்குகிறேன்

நட்சத்திரங்களை
என் கைகளில் மூடியவுடன்
ஒளியை இழந்து விடுகின்றன

மறுபடியும்
அவற்றை இருளில் வீசி எரிகிறேன்
நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன

இந்த
பிரபஞ்ச விளையாட்டில்
தொலைத்து விடுகிறேன்
என் அறிவை

இதை
விளையாடிக் கொண்டே இருக்கிறேன்
இருளில் நான் தொலையும் வரை

பிறகு புரிகிறது
நட்சத்திரங்கள் எனக்கு என்பதும்
இருளுக்கு நான் என்பதும்

Saturday, December 11, 2010

அமைதியின் மொழிகள்

சென்னை நகரின் சாலைகளெங்கும் எப்போதுமே மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த உச்சி வெயில் பொழுதிலும் வாகனங்களும் மனிதர்களும் சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த திரளான மக்கள் பயணத்தில் வெயிலும் தன்னை இணைத்துக்கொண்டே இயங்குகிறது.வண்டியை என்னால் ஓட்ட முடியவில்லை.அக்குள்,பின் கழுத்து என உடம்பில் துணியால் மறைக்கப்பட்ட பாகங்கள் அனைத்தும் வியர்வை வடிந்து நாறுகிறது.AC போட்டுக் கொண்டு செல்லும் கார்களில் அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது எரிச்சல் இன்னும் அதிகமாகிறது.ஆனாலும் நடந்து செல்லும் மனிதர்கள் என்னைப் பார்த்து எரிச்சல் அடைவார்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.மனித மனம் எப்போதுமே எல்லோர் மீதும் எரிச்சலையும் பொறாமையையும் கொண்டே இயங்குகிறது.அது தன்னளவில் நிறைவை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.சுயநலம பொதுநலம் என்பதற்கான விளக்கங்களும் கோட்பாடுகளும் எவராலுமே விவரிக்க முடியாது.

மேலும் இந்த மக்கள் பயணங்களின் ஒழுங்கின்மை வெயில் தாண்டிய எரிச்சலை வரவழைக்கிறது.சிக்னலில் நின்று கொண்டிருக்கிறேன்.இரு கால்களையும் இழந்த ஒருவன் தன் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காக யாசகம் கேட்டபடி கைகளை வைத்து புட்டங்களால் நடந்து வருகிறான்.இந்த தார் ரோட்டின் கொதிப்பு அவன் புட்டங்களை எரிக்கததை கண்டு வியந்து நிற்கிறேன்.ஆனால் என்னை சுற்றி நிற்கும் எவரும் அவனைப் பார்கவில்லை.அவர்களின் கண்கள் சிக்னலின் மீதும்,கைகள் வண்டியை முறுக்கிக் கொண்டும்,கால்கள் பூமியில் படாமலும் நிற்கிறார்கள்.சக மனிதனின் இருப்பின் வலியை சற்றும் நின்று கவனிக்காமல் இவ்வளவு அவசரமாக இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.அதுவும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு,சிக்னல் விழுவதற்கு இன்னும் நேரம் இருந்தாலும் ஹாரனை அழுத்திக்கொண்டு ஒழுங்கின்மையோடு அவர்கள் செல்வது மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.

மிக சாதரணமாக என் கண்களைத் திருப்பி அந்த பிச்சைக்காரனைப் பார்க்கிறேன்.அவன் உடைகளைத் துவைத்தோ அவன் குளித்தோ வருடங்கள் ஆகியிருக்கும்.அவனைப் பார்க்கும்போது அவன் உண்டு உறங்கி கழிக்கும் இடம் எதுவாக இருக்கும் என தோன்றுகிறது.அவனுடைய வாழ்வின் அர்த்தம் என்னவாக இருக்கும் எனப் பிடிபட மறுக்கிறது.ஆனாலும் மனிதர்கள் வாழவே விரும்புகிறார்கள்.வாழ்க்கையைப் பற்றி புலம்பிக் கொண்டே வாழ விரும்புகிறார்கள்.மரணம் என்பது அச்சம் தருவதாகவே இருக்கிறது.தனக்கு அடுத்த வேளை உணவு கிடக்குமா என்பதில் கூட உறுதி இல்லாத இவனும் யாசகம் கேட்டு வாழ்கிறான்.உண்மையில் இங்கு எந்த மனிதனுக்கும் தன வாழ்வின் மேல்,இருப்பின் மேல் உறுதி இல்லையெனினும் வாழ்வில் எவ்வளவு வருத்தங்கள் இருப்பினும் அது துன்பத்தின் உச்சமாக இருப்பினும் மனிதன் வாழவே விரும்புகிறான்.என்னைப் போலவே.
எனது எண்ணங்களைத் துண்டித்த ஹாரன் சப்தங்கள் கேட்ட போது தான் சிக்னல் விழுந்து விட்டதை உணர்ந்து வண்டியை நகர்த்த முற்பட்டேன்.அந்த பிச்சைக்காரனும் வேகமாக நகர முற்பட்டான்.அந்த வினாடியில் அவன் கண்களைப் பார்த்தேன்.மனித மனம் கண்களில் தான் வெளிப்படுகிறது.உயிரையும் பசியையும் கண்களில் பிடித்து வைத்திருந்த அவன் கண்கள் என் ஆன்மாவை அடித்து காயமாக்கியது.  இந்த ஆன்மாவைக் காயப்படுத்தும் கண்களைக் கொண்டவள் என் காதலி மட்டுமே என இதுவரை எண்ணியிருந்தேன். நான் தன்னிச்சையாக நகர முற்பட்டபோது ஹாரன் அலறலும் அதனைத் தொடர்ந்து ஒரு மாநகரப் பேருந்தின் வேகமான இடியையும் தாங்கிக் கொண்டு கொதிக்கும் தார் ரோட்டில் விழுந்தேன்.வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அவ்வண்டியின் சக்கரம் என் தலை மேல் ஏறியது.

எந்த வலியையும் நான் உணரவில்லை.தார் ரோடின் கொதிப்பும்,வெயிலின் சூடும் எரிச்சலின் உச்சக்கட்ட குரூரத்தை உணர்த்தின.காட்சிகளின் மயக்கமும் சப்தங்களின் மயக்கமும் வெளியங்கும் நிறைந்தன. ஒளியில் மூழ்கிக் கொண்டிருந்தேன்.உடலில் காற்று வேக வேகமாக வெளியில் சென்று கொண்டிருந்தது.ஆனால் உடலில் எங்கும் வலி இல்லை.நினைவுகள் சுழன்று சுழன்று என்னை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன.அம்மா,அப்பா,நண்பர்கள்,பள்ளி,கல்லூரி என எண்ணங்கள் திசை மாறி,காட்சிகள் எவ்வித ஒழுங்கும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தன.உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.காற்று,தண்ணீர்,பறவைகள்,பூக்கள்,மழை,வயல் வெளிகள்,மலைகள்,நெருப்பு,அதிகாலை,புளி சாதம்,மார்கழி குளிரும் பஜனையும்,கால்கள் நனைக்கும் தண்ணீர் ...இப்படி ஓடி கொண்டிருந்த நினைவுகள் ஒரு புள்ளியில் நின்ற போது அங்கு வெறுமையும்,பின்பு  அந்த வெறுமையை அவளுடைய முகமும் nirappiyadhu.

அவள்....அவளுக்கு கடிதம் ஒன்றை எழுதி விட நினைக்கிறேன்.எழுத்துக்களால் எதுவும் இப்போது என்னால் எழுத முடியாது.என் கைகள் என்னிடம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை.எண்ணங்களால் எழுதும் எழுத்துக்களுக்கு வடிவம் இல்லை..இந்த கடிதத்திற்கு மொழி கிடையாது.வடிவம் கிடையாது.இவை என்னுடைய நினைவுகள்.காற்றின் பரந்த வெளியில் என்னோடு கரைந்து கலந்து விடும் நினைவுகள்.இதனைப் படிப்பவர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இதனைப் புரிந்து கொள்ளட்டும்.

அன்புள்ள காதலிக்கு,
தனிமையின் இருளிலும் அதன் அமைதியிலும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில்,இரைச்சலாக வந்து சேர்ந்தாய்.அமைதியில் ஆனந்தமும் இரைச்சலில் பேரானந்தமும் இருக்கும் அதிசயத்தை எனக்கு உணர்த்தினாய்.என்னுள் எப்படி இவ்வளவு  நீ நுழைந்தாய் என்பதற்கு நிறைய கணங்கள் சாட்சிகளாக கிடக்கின்றன.ராமனைப் போல் கண்டதும் காதல் கொண்டவனல்ல நான்.அது உருவத்தின் மீது ஏற்படும் மோகம்.நான் உன்னிடம் ஈர்க்கப்பட்டது என் ஆன்மாவின் மையப்புள்ளியிலிருந்து.என் தோளில் நீ சாய்ந்த வினாடிகள்,என் கன்னத்தில் நீ பதித்த முத்தங்கள்,என் கண்களின் வழியே என் உயிரை உருக்கிய பொழுதுகள்,நீ கண்ணீர் உகுத்து ஈரமாக்கிய உடைகள் என என்னுடைய நினைவுகள் மூலம் என் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சியாக்கியவள் நீ.உன்னுடன் இருந்த நிமிடங்களில் எல்லாம் வாழ்வின் முழு சுவையையும் காட்சிகளின் மகோன்னதமான புனிதத்தையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்தேன். என்னை இருளில் இருந்து கைப் பிடித்து வாழ்வின் மையத்திற்கு அழைத்து வந்தாய்.அந்த நிமிடங்களை எல்லாம் உன்னுடைய இருப்பால் நிரப்பி என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தாய்.நீ இல்லாத நிமிடங்களில் எல்லாம் இயற்கை என்னை வருத்தியது.வானம் என் மேல் விழுந்து அழுத்தியது.உனக்காக ஒவ்வொரு வினாடியும் ஏங்கித் தவித்தேன்.என்னுடைய இருப்பை உன் வழியே பார்த்தேன்.என் தேவதையே...உன் கண்களைப் போல் இவ்வுலகின் உண்மைப் பேசும் ஆன்மாவை நான் பார்த்ததில்லை.அதனை பார்த்துக் கொண்டே என் ஆயுள் முழுதும் கழித்து விட்டு உன் கைகளைப் பிடித்தபடியே மரணமடைய நினைத்தேன்.உன் கண்களில் நான் என் உயிரின் வடிவத்தைப் பார்த்தேன்.என் ஆன்மாவின் புனிதத்தைப் பார்த்தேன்.இயற்கையின் பேராட்சியைப் பார்த்தேன்.என்னை கலங்கச் செய்யும் அந்த கண்களைத் தவிர உலகின் மதிப்பற்ற பொருள் ஏதும் இருந்ததாக உணரவில்லை.என் உயிரை உருக்கி உன் உயிரோடு கலந்து கிடந்தேன்.

ஒரு சுகமான உறக்கத்தின் ஆழமான கனவுகளின் போது திடீரென்று ஏற்படும் விழிப்பின் காரணமாக விளையும் ஒரு நெஞ்சு வலியைப் போல் இந்த சுகமான நினைவுகளை மட்டும் எனக்கு அளித்து விட்டு,வாழ்வின் யதார்த்தமான தருணங்களை அழித்து காயமாக்கி நீ சென்ற அந்த நாளிலும் உன் கண்களைப் பார்த்தபடியே மயங்கிக் கிடந்தேன்.இப்போது உடலில் வலியை உணர்கிறேன்.ஒரு கொடுமையான வெயில் பொழுதில் ஒரு நாயின் வாயில் இருந்து வறண்ட நீர் சொட்டிக் கொண்டிருந்தபோது நீ வந்தாய்.நீ பிரிந்து செல்வதை சொல்வதற்காக.என் ஆன்மாவின் அனைத்து பரிமாணங்களும் காயப்பட்டு வேதனையின் உச்சத்தில் வெயில் என்னை எரிக்க மொழிகள் அற்று நின்ற அந்த பொழுதை விட இப்போது என் பார்வை இழந்து,பேச்சை இழந்து,பூமியின் மடியில்,வெயில் எரிக்க,நீர் வற்றிக் கிடக்கும் நிலையில் நான் சற்றே அமைதியை உணர்கிறேன்.நான் மரணித்துக் கொண்டிருக்கிறேன்.மரணம் இவ்வளவு குரூரமாய் எனக்கு அமைந்து விட்டது என் வாழ்வின் சாபமாக இருப்பினும் உன்னை பிரிந்த விநாடிகளை விட இது அமைதியாகவே இருக்கிறது.ஆனாலும் என் தேவதையே...இப்பொழுதும் ஒரு பரி பூரண வாழ்வை வாழ்ந்து விட்ட திருப்தியிலேயே இறக்கிறேன்.இந்த முப்பது வயதிலும் ஒரு ௧௦௦ வயது வாழ்ந்து விட்ட மகிழ்ச்சி உன்னாலே,உன் கண்களாலே தான் எனக்கு கிடைத்திருக்கிறது.நான் இப்பொழுதும் மரணத்தின் வாயிலிலும் நின்று உன் கண்களை மட்டுமே காண்கிறேன்.என் உயிரின் வாசல் அது.உன் கண்களின் வழியே என் உயிரை விடுவித்து விடு.மகிழ்ச்சியோடு மரணம் கொள்கிறேன்.

நான் செல்கிறேன் என் அன்பு தேவதையே.....

என் உடலை நிர்வாணப்படுத்தி குளிக்க வைக்கும் போது என் அம்மா அதனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.அம்மா..நீ என்னை சிறு வயதில் குளிக்க வைத்த போது காட்டிய எதிர்ப்பை இப்போது காட்ட மாட்டேன்.சலனமில்லாமல் அமைதியாக இருப்பேன்.என்னை நிர்வாணமாய் பார்த்த ஒரே உயிர் இந்த உலகில் நீயாகவே இருந்து விட்டு போ.உன் முலைக் காம்பின் வாசமும்,உன் உயிர் பாலின் சுவையும் எனக்கு இதுவரை தெரிந்ததில்லை.இப்போது நாவில் அது தெரிகிறது.அம்மா....நா வறண்டு விட்டது.சிறிது தண்ணீர் ஊற்றுவாயா?

உலகம் இனியது..வாழ்க்கை இனியது..என் அம்மா இனியவள்..அப்பா இனியவர்..காதலி மிக இனியவள்..சகோதரி,நண்பர்கள்,என்னோடு இருந்த சக மனிதர்கள்...இனிது இனிது அனைத்தும் இனிது.இதை இறந்த யாரேனும் வாழ்பவர்களுக்கு சொல்லி விட்டு மறைந்து விடுங்கள்.வாழ்பவர்கள் ஓட மாட்டார்கள்.சக மனிதனை நேசிப்பார்கள்.பணத்தை விட பெரிய ஒன்று எல்லோருக்கும் கிடைக்கும்.

நான் மரணிக்கிறேன்...

அங்கு வந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கியவார்கள் அவனை தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றார்கள்.சிதறிக் கிடந்த அவன் மூளையையும் அவனுடைய நினைவுகளையும்.வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் பயணிக்க ஆரம்பித்தார்கள்.அவனுடைய நினைவுகளை அவன் காதலி கடைசி வரை அறியவில்லை.அவனுடைய தாகத்தை அவனுடைய அம்மா கடைசி வரை அறியவில்லை...

Sunday, November 28, 2010

நிழல்களில் கரைந்து போகட்டும் உடல்கள்

நிழல்களில்
கரைந்து போகட்டும் உடல்கள்

நிழல்களுக்கு....
சாதிகள் இல்லை
மதங்கள் இல்லை
வண்ணங்கள் இல்லை
அழகு இல்லை
அதனால் அகோரமும் இல்லை

நிழல்கள்
தினமும் புதிதாய் பிறக்கின்றன
தினமும் புதிதாய் இறக்கின்றன
நினைவுகள் அற்றதாய் இருக்கின்றன

நேற்றைய தினம்
தனக்கு துரோஹம் செய்த
மற்றொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை

இன்றைய தினம்
தனக்கு மகிழ்ச்சி செய்த
இன்னொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை

நிழல்களின் உலகத்தில்
எப்போதும் சூரியன் இருக்கிறது
ஆனாலும்
எப்போதும் இருள் இருக்கிறது

நிழல்களில்
ஊனம் \இல்லை
தீண்டாமை இல்லை
இருப்பின் அவஸ்தைகள் இல்லை
பணம் இல்லை
பசி இல்லை
முதிர் கண்ணிகள் இல்லை
அழகிகள் இல்லை
புணர்வுகள் இல்லை
பிச்சைகாரர்கள் இல்லை

நிழல்கள்
உடைகள் அணிவதில்லை
நகைகளும் அணிவதில்லை


என் உடலும்
நிழலில் கரைந்து போகட்டும்

எல்லா மனிதர்களின் உடல்களும்
நிழல்களில் கரைந்து போகட்டும்

எப்போதும்
இருள் சேர்ந்த அமைதியில்
கரைந்தபடியே
இருந்து விடுவோம்

Wednesday, May 12, 2010

You see...Once in a while my life become so miserable that I just can't bear to go on living.It's as if Im the only creature in the whole wide world,it's as if there are no other living creatures except me anywhere in this world.At such times I hate everything.I hate every being including myself.I wouldnt give a damn if everybody died.It must be some sickness in my heart.That is what get started me drinking

Thursday, April 29, 2010

Only a handsome race can sing well.A race with full love of life.While others prefers to go to bed after a day of tiring work,humans in this race prefers to sing when the moon light falls even after a full day of tiring work

Friday, April 16, 2010

பெருமழையின் ஒரு துளி,கடலில் அமைதியாக கலந்து விடுவது போல எனது வாழ்கையும் மரணத்தில் கலந்து விடுகிறது.ஒவ்வொரு தனி மனித வாழ்வும் ஒவ்வொரு மழையின் துளியைப் போலத்தான்.ஆரவாரமாக தொடங்கும் மழைத் துளி கடலில் கலந்து அமைதியாக காணாமல் போய் விடுகிறது.அத்தனை ஆரவாரத்தையும் தன்னோடு வாங்கிக் கொண்டு அமைதியாக கடல் விளங்குகிறது.மரணமும் அதை போலதான்.எண்ணற்ற உணர்வுகளின் குவியலாய் விளங்கும் ஆர்ப்பாட்டமான மனித வாழ்க்கையை தன்னுள்ளே அமைதியாய் அடக்கிக் கொள்கிறது.

கடலில் கலந்து காணாமல் போய் விடுவதால் மழையின் துளி இல்லாமல் போய் விடுவதில்லை.அது தன்னளவில் இருந்து மறைகிறது.அதனைப் போலவே மனித இருப்பும் மரணத்தால் அழிக்கப்படும் போதிலும்  தன்னிறைவைத்  தேடி இயங்குகிறது.ஆனாலும் மரணத்திற்கு முன்னாலும் தன்னுடைய இருப்பை தன்னளவில் நிறைவமைத்துக் கொண்ட ஆன்மாக்களின் எண்ணிக்கை யோசிக்க வைக்கிறது....