Sunday, November 28, 2010

நிழல்களில் கரைந்து போகட்டும் உடல்கள்

நிழல்களில்
கரைந்து போகட்டும் உடல்கள்

நிழல்களுக்கு....
சாதிகள் இல்லை
மதங்கள் இல்லை
வண்ணங்கள் இல்லை
அழகு இல்லை
அதனால் அகோரமும் இல்லை

நிழல்கள்
தினமும் புதிதாய் பிறக்கின்றன
தினமும் புதிதாய் இறக்கின்றன
நினைவுகள் அற்றதாய் இருக்கின்றன

நேற்றைய தினம்
தனக்கு துரோஹம் செய்த
மற்றொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை

இன்றைய தினம்
தனக்கு மகிழ்ச்சி செய்த
இன்னொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை

நிழல்களின் உலகத்தில்
எப்போதும் சூரியன் இருக்கிறது
ஆனாலும்
எப்போதும் இருள் இருக்கிறது

நிழல்களில்
ஊனம் \இல்லை
தீண்டாமை இல்லை
இருப்பின் அவஸ்தைகள் இல்லை
பணம் இல்லை
பசி இல்லை
முதிர் கண்ணிகள் இல்லை
அழகிகள் இல்லை
புணர்வுகள் இல்லை
பிச்சைகாரர்கள் இல்லை

நிழல்கள்
உடைகள் அணிவதில்லை
நகைகளும் அணிவதில்லை


என் உடலும்
நிழலில் கரைந்து போகட்டும்

எல்லா மனிதர்களின் உடல்களும்
நிழல்களில் கரைந்து போகட்டும்

எப்போதும்
இருள் சேர்ந்த அமைதியில்
கரைந்தபடியே
இருந்து விடுவோம்

No comments: