சென்னை நகரின் சாலைகளெங்கும் எப்போதுமே மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த உச்சி வெயில் பொழுதிலும் வாகனங்களும் மனிதர்களும் சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த திரளான மக்கள் பயணத்தில் வெயிலும் தன்னை இணைத்துக்கொண்டே இயங்குகிறது.வண்டியை என்னால் ஓட்ட முடியவில்லை.அக்குள்,பின் கழுத்து என உடம்பில் துணியால் மறைக்கப்பட்ட பாகங்கள் அனைத்தும் வியர்வை வடிந்து நாறுகிறது.AC போட்டுக் கொண்டு செல்லும் கார்களில் அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது எரிச்சல் இன்னும் அதிகமாகிறது.ஆனாலும் நடந்து செல்லும் மனிதர்கள் என்னைப் பார்த்து எரிச்சல் அடைவார்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.மனித மனம் எப்போதுமே எல்லோர் மீதும் எரிச்சலையும் பொறாமையையும் கொண்டே இயங்குகிறது.அது தன்னளவில் நிறைவை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.சுயநலம பொதுநலம் என்பதற்கான விளக்கங்களும் கோட்பாடுகளும் எவராலுமே விவரிக்க முடியாது.
மேலும் இந்த மக்கள் பயணங்களின் ஒழுங்கின்மை வெயில் தாண்டிய எரிச்சலை வரவழைக்கிறது.சிக்னலில் நின்று கொண்டிருக்கிறேன்.இரு கால்களையும் இழந்த ஒருவன் தன் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காக யாசகம் கேட்டபடி கைகளை வைத்து புட்டங்களால் நடந்து வருகிறான்.இந்த தார் ரோட்டின் கொதிப்பு அவன் புட்டங்களை எரிக்கததை கண்டு வியந்து நிற்கிறேன்.ஆனால் என்னை சுற்றி நிற்கும் எவரும் அவனைப் பார்கவில்லை.அவர்களின் கண்கள் சிக்னலின் மீதும்,கைகள் வண்டியை முறுக்கிக் கொண்டும்,கால்கள் பூமியில் படாமலும் நிற்கிறார்கள்.சக மனிதனின் இருப்பின் வலியை சற்றும் நின்று கவனிக்காமல் இவ்வளவு அவசரமாக இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.அதுவும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு,சிக்னல் விழுவதற்கு இன்னும் நேரம் இருந்தாலும் ஹாரனை அழுத்திக்கொண்டு ஒழுங்கின்மையோடு அவர்கள் செல்வது மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.
மிக சாதரணமாக என் கண்களைத் திருப்பி அந்த பிச்சைக்காரனைப் பார்க்கிறேன்.அவன் உடைகளைத் துவைத்தோ அவன் குளித்தோ வருடங்கள் ஆகியிருக்கும்.அவனைப் பார்க்கும்போது அவன் உண்டு உறங்கி கழிக்கும் இடம் எதுவாக இருக்கும் என தோன்றுகிறது.அவனுடைய வாழ்வின் அர்த்தம் என்னவாக இருக்கும் எனப் பிடிபட மறுக்கிறது.ஆனாலும் மனிதர்கள் வாழவே விரும்புகிறார்கள்.வாழ்க்கையைப் பற்றி புலம்பிக் கொண்டே வாழ விரும்புகிறார்கள்.மரணம் என்பது அச்சம் தருவதாகவே இருக்கிறது.தனக்கு அடுத்த வேளை உணவு கிடக்குமா என்பதில் கூட உறுதி இல்லாத இவனும் யாசகம் கேட்டு வாழ்கிறான்.உண்மையில் இங்கு எந்த மனிதனுக்கும் தன வாழ்வின் மேல்,இருப்பின் மேல் உறுதி இல்லையெனினும் வாழ்வில் எவ்வளவு வருத்தங்கள் இருப்பினும் அது துன்பத்தின் உச்சமாக இருப்பினும் மனிதன் வாழவே விரும்புகிறான்.என்னைப் போலவே.
எனது எண்ணங்களைத் துண்டித்த ஹாரன் சப்தங்கள் கேட்ட போது தான் சிக்னல் விழுந்து விட்டதை உணர்ந்து வண்டியை நகர்த்த முற்பட்டேன்.அந்த பிச்சைக்காரனும் வேகமாக நகர முற்பட்டான்.அந்த வினாடியில் அவன் கண்களைப் பார்த்தேன்.மனித மனம் கண்களில் தான் வெளிப்படுகிறது.உயிரையும் பசியையும் கண்களில் பிடித்து வைத்திருந்த அவன் கண்கள் என் ஆன்மாவை அடித்து காயமாக்கியது. இந்த ஆன்மாவைக் காயப்படுத்தும் கண்களைக் கொண்டவள் என் காதலி மட்டுமே என இதுவரை எண்ணியிருந்தேன். நான் தன்னிச்சையாக நகர முற்பட்டபோது ஹாரன் அலறலும் அதனைத் தொடர்ந்து ஒரு மாநகரப் பேருந்தின் வேகமான இடியையும் தாங்கிக் கொண்டு கொதிக்கும் தார் ரோட்டில் விழுந்தேன்.வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அவ்வண்டியின் சக்கரம் என் தலை மேல் ஏறியது.
எந்த வலியையும் நான் உணரவில்லை.தார் ரோடின் கொதிப்பும்,வெயிலின் சூடும் எரிச்சலின் உச்சக்கட்ட குரூரத்தை உணர்த்தின.காட்சிகளின் மயக்கமும் சப்தங்களின் மயக்கமும் வெளியங்கும் நிறைந்தன. ஒளியில் மூழ்கிக் கொண்டிருந்தேன்.உடலில் காற்று வேக வேகமாக வெளியில் சென்று கொண்டிருந்தது.ஆனால் உடலில் எங்கும் வலி இல்லை.நினைவுகள் சுழன்று சுழன்று என்னை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன.அம்மா,அப்பா,நண்பர்கள்,பள்ளி,கல்லூரி என எண்ணங்கள் திசை மாறி,காட்சிகள் எவ்வித ஒழுங்கும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தன.உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.காற்று,தண்ணீர்,பறவைகள்,பூக்கள்,மழை,வயல் வெளிகள்,மலைகள்,நெருப்பு,அதிகாலை,புளி சாதம்,மார்கழி குளிரும் பஜனையும்,கால்கள் நனைக்கும் தண்ணீர் ...இப்படி ஓடி கொண்டிருந்த நினைவுகள் ஒரு புள்ளியில் நின்ற போது அங்கு வெறுமையும்,பின்பு அந்த வெறுமையை அவளுடைய முகமும் nirappiyadhu.
அவள்....அவளுக்கு கடிதம் ஒன்றை எழுதி விட நினைக்கிறேன்.எழுத்துக்களால் எதுவும் இப்போது என்னால் எழுத முடியாது.என் கைகள் என்னிடம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை.எண்ணங்களால் எழுதும் எழுத்துக்களுக்கு வடிவம் இல்லை..இந்த கடிதத்திற்கு மொழி கிடையாது.வடிவம் கிடையாது.இவை என்னுடைய நினைவுகள்.காற்றின் பரந்த வெளியில் என்னோடு கரைந்து கலந்து விடும் நினைவுகள்.இதனைப் படிப்பவர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இதனைப் புரிந்து கொள்ளட்டும்.
அன்புள்ள காதலிக்கு,
தனிமையின் இருளிலும் அதன் அமைதியிலும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில்,இரைச்சலாக வந்து சேர்ந்தாய்.அமைதியில் ஆனந்தமும் இரைச்சலில் பேரானந்தமும் இருக்கும் அதிசயத்தை எனக்கு உணர்த்தினாய்.என்னுள் எப்படி இவ்வளவு நீ நுழைந்தாய் என்பதற்கு நிறைய கணங்கள் சாட்சிகளாக கிடக்கின்றன.ராமனைப் போல் கண்டதும் காதல் கொண்டவனல்ல நான்.அது உருவத்தின் மீது ஏற்படும் மோகம்.நான் உன்னிடம் ஈர்க்கப்பட்டது என் ஆன்மாவின் மையப்புள்ளியிலிருந்து.என் தோளில் நீ சாய்ந்த வினாடிகள்,என் கன்னத்தில் நீ பதித்த முத்தங்கள்,என் கண்களின் வழியே என் உயிரை உருக்கிய பொழுதுகள்,நீ கண்ணீர் உகுத்து ஈரமாக்கிய உடைகள் என என்னுடைய நினைவுகள் மூலம் என் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சியாக்கியவள் நீ.உன்னுடன் இருந்த நிமிடங்களில் எல்லாம் வாழ்வின் முழு சுவையையும் காட்சிகளின் மகோன்னதமான புனிதத்தையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்தேன். என்னை இருளில் இருந்து கைப் பிடித்து வாழ்வின் மையத்திற்கு அழைத்து வந்தாய்.அந்த நிமிடங்களை எல்லாம் உன்னுடைய இருப்பால் நிரப்பி என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தாய்.நீ இல்லாத நிமிடங்களில் எல்லாம் இயற்கை என்னை வருத்தியது.வானம் என் மேல் விழுந்து அழுத்தியது.உனக்காக ஒவ்வொரு வினாடியும் ஏங்கித் தவித்தேன்.என்னுடைய இருப்பை உன் வழியே பார்த்தேன்.என் தேவதையே...உன் கண்களைப் போல் இவ்வுலகின் உண்மைப் பேசும் ஆன்மாவை நான் பார்த்ததில்லை.அதனை பார்த்துக் கொண்டே என் ஆயுள் முழுதும் கழித்து விட்டு உன் கைகளைப் பிடித்தபடியே மரணமடைய நினைத்தேன்.உன் கண்களில் நான் என் உயிரின் வடிவத்தைப் பார்த்தேன்.என் ஆன்மாவின் புனிதத்தைப் பார்த்தேன்.இயற்கையின் பேராட்சியைப் பார்த்தேன்.என்னை கலங்கச் செய்யும் அந்த கண்களைத் தவிர உலகின் மதிப்பற்ற பொருள் ஏதும் இருந்ததாக உணரவில்லை.என் உயிரை உருக்கி உன் உயிரோடு கலந்து கிடந்தேன்.
ஒரு சுகமான உறக்கத்தின் ஆழமான கனவுகளின் போது திடீரென்று ஏற்படும் விழிப்பின் காரணமாக விளையும் ஒரு நெஞ்சு வலியைப் போல் இந்த சுகமான நினைவுகளை மட்டும் எனக்கு அளித்து விட்டு,வாழ்வின் யதார்த்தமான தருணங்களை அழித்து காயமாக்கி நீ சென்ற அந்த நாளிலும் உன் கண்களைப் பார்த்தபடியே மயங்கிக் கிடந்தேன்.இப்போது உடலில் வலியை உணர்கிறேன்.ஒரு கொடுமையான வெயில் பொழுதில் ஒரு நாயின் வாயில் இருந்து வறண்ட நீர் சொட்டிக் கொண்டிருந்தபோது நீ வந்தாய்.நீ பிரிந்து செல்வதை சொல்வதற்காக.என் ஆன்மாவின் அனைத்து பரிமாணங்களும் காயப்பட்டு வேதனையின் உச்சத்தில் வெயில் என்னை எரிக்க மொழிகள் அற்று நின்ற அந்த பொழுதை விட இப்போது என் பார்வை இழந்து,பேச்சை இழந்து,பூமியின் மடியில்,வெயில் எரிக்க,நீர் வற்றிக் கிடக்கும் நிலையில் நான் சற்றே அமைதியை உணர்கிறேன்.நான் மரணித்துக் கொண்டிருக்கிறேன்.மரணம் இவ்வளவு குரூரமாய் எனக்கு அமைந்து விட்டது என் வாழ்வின் சாபமாக இருப்பினும் உன்னை பிரிந்த விநாடிகளை விட இது அமைதியாகவே இருக்கிறது.ஆனாலும் என் தேவதையே...இப்பொழுதும் ஒரு பரி பூரண வாழ்வை வாழ்ந்து விட்ட திருப்தியிலேயே இறக்கிறேன்.இந்த முப்பது வயதிலும் ஒரு ௧௦௦ வயது வாழ்ந்து விட்ட மகிழ்ச்சி உன்னாலே,உன் கண்களாலே தான் எனக்கு கிடைத்திருக்கிறது.நான் இப்பொழுதும் மரணத்தின் வாயிலிலும் நின்று உன் கண்களை மட்டுமே காண்கிறேன்.என் உயிரின் வாசல் அது.உன் கண்களின் வழியே என் உயிரை விடுவித்து விடு.மகிழ்ச்சியோடு மரணம் கொள்கிறேன்.
நான் செல்கிறேன் என் அன்பு தேவதையே.....
என் உடலை நிர்வாணப்படுத்தி குளிக்க வைக்கும் போது என் அம்மா அதனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.அம்மா..நீ என்னை சிறு வயதில் குளிக்க வைத்த போது காட்டிய எதிர்ப்பை இப்போது காட்ட மாட்டேன்.சலனமில்லாமல் அமைதியாக இருப்பேன்.என்னை நிர்வாணமாய் பார்த்த ஒரே உயிர் இந்த உலகில் நீயாகவே இருந்து விட்டு போ.உன் முலைக் காம்பின் வாசமும்,உன் உயிர் பாலின் சுவையும் எனக்கு இதுவரை தெரிந்ததில்லை.இப்போது நாவில் அது தெரிகிறது.அம்மா....நா வறண்டு விட்டது.சிறிது தண்ணீர் ஊற்றுவாயா?
உலகம் இனியது..வாழ்க்கை இனியது..என் அம்மா இனியவள்..அப்பா இனியவர்..காதலி மிக இனியவள்..சகோதரி,நண்பர்கள்,என்னோடு இருந்த சக மனிதர்கள்...இனிது இனிது அனைத்தும் இனிது.இதை இறந்த யாரேனும் வாழ்பவர்களுக்கு சொல்லி விட்டு மறைந்து விடுங்கள்.வாழ்பவர்கள் ஓட மாட்டார்கள்.சக மனிதனை நேசிப்பார்கள்.பணத்தை விட பெரிய ஒன்று எல்லோருக்கும் கிடைக்கும்.
நான் மரணிக்கிறேன்...
அங்கு வந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கியவார்கள் அவனை தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றார்கள்.சிதறிக் கிடந்த அவன் மூளையையும் அவனுடைய நினைவுகளையும்.வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் பயணிக்க ஆரம்பித்தார்கள்.அவனுடைய நினைவுகளை அவன் காதலி கடைசி வரை அறியவில்லை.அவனுடைய தாகத்தை அவனுடைய அம்மா கடைசி வரை அறியவில்லை...
No comments:
Post a Comment