அன்புள்ள நாஸ்தென்கா,
இந்த அற்புதமான உலகின் மனிதர்களெல்லாம்,இறைவனின் மிகச் சிறந்த படைப்பான இயற்கையின் எல்லைகளை மீறி இயங்குவது எதனால்?சக மனிதனை நேசிக்க மறந்து,மரணத்தை மீறி இயங்குவது எதனால்?ஆழ் மனதின் நினைவுகளில் இருந்து எழும் கேள்விகளுக்கு விடை காண முயன்று நான் தோற்று விழுவது எதனால்?வாழ்க்கையின் பின்னல்கள் அனைத்தும் ஒரு சிலந்தியின் வலையைப் போலவே இருக்கிறது.சிலந்தி வலையின் ஏதோ ஒரு மூலையில் வந்து விழும் தூசியின் அதிர்வுகள் சிலந்தியின் இருப்பினை ஆக்ரோஷமாக அசைப்பது போலவும்,ஒரு நெடிய அமைதியான சூழலின் உறக்கத்தில் ஒரு கோயில் மணியின் சப்தம் இதயத்தில் வலி ஏற்படுத்தி முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து சென்று மூளையில் சுரீரென குத்துவது போலவும்,என் இருப்பிலும் இதயத்திலும் சலனம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு மாலை நேரத்தில் நீ வந்தாய்.அந்தி மயங்கும் நேரத்தில்,சூரிய உதயத்தை விடவும்,நிலவின் மயக்கத்தை விடவும்,அதிகம் ரம்மியத்தைக் காண்பவன் நான்.பறவைகளும்,மக்களும்,விலங்குகளும் தங்கள் கூட்டை நோக்கி ஓடும் நேரமது.வெயிலின் வெப்பம் குறைந்து,குளிர்ந்த காற்று வீசி,மேய்ச்சலுக்குப் போன ஆடுகளும்,மாடுகளும்,கோழிகளும் மந்தைகளாக பட்டிகளை நோக்கி ஓடும் நேரமது.சலசலத்து கூழாங் கற்கள் மேல் தன் சப்தத்தை எழுப்பியபடி,கரையோர நாணல்களை வளைத்து,காற்றை ஈரமாக்கி ஓடும் நதிகளின் நீரில்,மங்கிய தன் ஒளிக் கற்றைகளை வீசி நீரினை இளஞ் சூடாக்கி பூமிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் சிவந்த மஞ்சள் வண்ணத்தினால் மேகங்கள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக சிவந்து கிடக்கும் நேரமது.ஆர்ப்பாட்டங்கள் அடங்கி ஒரு பேரின்ப மயக்கமான அமைதி எல்லாத் திசைகளிலும் வியாபித்து கிடக்கும் இந்த நேரத்தில் நீ வந்தாய்.
நாஸ்தென்கா...தனிமையின் அமைதியில் இன்பம் இருக்கும் அதே அளவில்,மிக குரூரமான,ஆன்மாவைக் குலைக்கும் சக்தியும் இருக்கிறது.இந்த தனிமையின் துயரத்தில் நான் கரைந்து கொண்டிருந்த நேரத்தில் தான் நீ வந்தாய் .பசியில் கத்தி,அம்மாவின் முலைக் காம்புகளை தேடி வாயில் வைத்து,அவள் இடுப்பில் அமைதியாக நிறைவுடன் தஞ்சமென அமரும் ஒரு சிறு குழந்தையைப் போலவே என் மனம் உன்னை நோக்கி ஓடியது.பாரதியின் சாக்தமென சக்தியின் வழிபாட்டை உன்னிடம் கண்டேன்.பராசக்தியாக,மகா காளியாக,என் மோட்சத்தின் வழியாக உன்னைக் கண்டு உருகி நின்றேன்.கல்லறைகளின் குழிகளில் உடைந்து கிடக்கும் மண்டை ஓடுகளில்,மெல்ல ஊர்ந்து செல்லும் கொடிய நாகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்த மனம் அன்று தான் அந்த கல்லறைகளின் ஓரங்களில் பூத்துக் கிடந்த மலர்களையும் பார்க்கப் பழகிக் கொண்டது.உன்னை காதலிக்க ஆரம்பித்த நொடிகளில்,அந்த மாலையின் மயக்கத்தை விடவும்,மனம் மயங்க ஆரம்பித்த நேரமது.வாழ்வின் வினாடிகள் அனைத்தும் புதியதாக உருவம் பெற்று நின்ற நேரமது.இந்த பிரபஞ்சத்தின் எல்லை இல்லாத அழகையும்,படைப்பின் பேரியக்கத்தையும் உனக்குள் நான் கண்ட நேரமது.காலையின் இளவெயிலில் மெல்லிய காற்றில் குளிருக்கு இதமாக கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டே ஒரு கோப்பைத் தேநீரைத் தேடி காற்றில் பறக்கும் பறவையைப் போல நடந்து திரிகிறேன்.எல்லையற்ற அந்த வானத்தின் எல்லைகளை அளந்து விடுவது போல ஒரு வானம்பாடி பறவை,தனக்கும் அந்த வானத்துக்கும் உள்ள காதலை பாடிக் கொண்டே செல்கிறது.காற்றில் கரைந்து விடும் ஒரு பறவையின் மெல்லிய உடலைப் போல,என் மனமும் பாரம் நீங்கி இயற்கையின் பேரழகில் கரைந்து விடுகிறது.உலகின் அழகியல் காட்சிகள் அனைத்தும் உன் கண்களின் வழியே வெளிப்படுகிறது.ஈரம் தங்கி விட்ட ஒரு நிலத்தில்,கால்களில் செருப்பை அணியாமல்,ஒரு ஓங்கிய பனை மரத்தின் நுங்கை கைகளால் நக்கி நக்கி விழுங்கும் ஒரு சிறுவனைப் போல ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளை நினைத்து நினைத்து மகிழ்ந்து கிடக்கிறேன்.
நாஸ்தென்கா...மரங்களில் எனக்குப் பிடித்த எலுமிச்சை மரங்களின் வாசமும்,பூக்களும் நிறைந்து கிடந்த ஒரு எலுமிச்சை தோட்டத்தில் அமர்ந்து வெறித்துக் கிடந்த வானத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தேன்.உடைகளை எல்லாம் களைந்து விட்டு உன்னைப் புணர்ந்து,உன் உடலின் சதைகளையும்,வாசத்தையும்,நாற்றத்தையும்,வனப்பையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்த வினாடிகள் அனைத்தும் இருண்டு கிடந்த வானத்தில் மின்னிய நட்சத்திர சிதறல்களில் காட்சிகளாக நிறைந்து கொண்டிருந்தன.நிலவின் ஒளியில் குளித்து,அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மொத்த உலகமும்,என் உடலை தன் அமைதியால் எரித்துக் கொண்டிருந்தன.எங்கிருந்தோ திரண்டு வந்த மேக கூட்டமொன்று என் மேல் பொழிந்து என் வெப்பத்தை அணைத்து விட்டுப் போனது.இப்படியே ஒவ்வொரு இரவுகளும் அமைதியிலும்,வெப்பத்திலும்,தனிமையிலும் என்னை சிதைத்துக் கொண்டிருந்தன.சிதறி ஓடும் எண்ணங்களை,ஒழுங்குபடுத்தி தன் கைகளில் வழியே எழுத்துக்களால் பதிவு செய்வது ஒரு எழுத்தாளனுக்கு எவ்வித வலியைக் கொடுக்குமோ,அதனை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தான் அவனைக் கண்டேன்.நடு நிசியில் பிச்சைக்காரனைப் போல் சுற்றி கொண்டிருக்கும் அவனை யாரென்று கேட்டேன்.ஈசன் என்று கூறினான்.நம்ப மறுத்த போது,தன் சடா முடியையும்,கழுத்தில் புரண்டு நெளிந்து கொண்டிருந்த பாம்பையும் எனக்கு காட்டினான்.மயானத்தில் தவம் செய்ய சென்று கொண்டிருந்த அவனுடன் நானும் சென்றேன்.இரவுகளில் மயானத்திற்கு செல்லும் ஆசை ஒன்று என் மனதுக்குள் சிறு வயது முதலே இருந்து கொண்டிருந்த ஒன்று.மோட்சத்தின் வழி எது என்று நான் கேட்ட போது,எரிந்து சாம்பலாகி அவன் உடல் மேல் உறையும் போது நான் மோட்சம் அடைவேன் என்றான்.எரியும் சடலத்தின் முன் நின்று அவன் ஆடிய ஆட்டத்தைக் கண்ட போது எனக்கு ஏற்பட்ட திக் பிரமையின் காரணமாக வார்த்தைகள் உறைந்து போய் விட்டன.உறைந்து விட்டிருந்த வார்த்தைகளை உருக்க முயற்சித்தபோது என்னை எட்டி உதைத்து கீழே என் நெஞ்சின் மேல் ஏறி நின்று பிரபஞ்ச தோற்றத்தின் ஆக்ரோஷமான நடனத்தை ஆடி முடிக்கிறான்.எலும்புகள் அனைத்தும் நொறுங்கி,உடல் அழிந்து,பாரம் இழந்து நீராக உருகிக் கிடந்த என்னை தன் கைகளால் அள்ளி திசைகளெங்கும் வீசி எறிகிறான்.காற்று என்னை தனக்குள் வாங்கிக் கொள்கிறது.உடலுக்குத்தான் எல்லைகள் உண்டு.உடலற்ற நிலையில் எல்லைகள் தாண்டி உணர்ந்தேன்.காற்று என்னைத் தங்கிச் சென்று என் நாச்தேன்கா விடம் சேர்த்தது.அவள் உடலுக்குள் நான் உறைந்து போனேன்.காற்றாக,நீராக,நெருப்பாக,உணர்வுகளாக,நினைவுகளாக அவள் உடலுக்குள் உறைந்து போனேன்.சிவன் அளிக்கும் மோட்சத்தை விட,இதுவே சிறந்த மோட்சம் என்று உணர்ந்து கொண்டேன்.....
No comments:
Post a Comment