எல்லையில்லாமல் விரிந்து செல்லும்
இருளின் கைகளுக்குள்
பிடிபடாமல்
மிதந்து கொண்டே இருக்கிறேன்
ஒளி ஒளியாய்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன
கடற்கரை மணலில்
சிப்பியைத் தேடும்
சிறுவனைப் போல்
இருளின் எல்லா திசைகளிலும்
நட்சத்திரங்களைப் பொறுக்குகிறேன்
நட்சத்திரங்களை
என் கைகளில் மூடியவுடன்
ஒளியை இழந்து விடுகின்றன
மறுபடியும்
அவற்றை இருளில் வீசி எரிகிறேன்
நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன
இந்த
பிரபஞ்ச விளையாட்டில்
தொலைத்து விடுகிறேன்
என் அறிவை
இதை
விளையாடிக் கொண்டே இருக்கிறேன்
இருளில் நான் தொலையும் வரை
பிறகு புரிகிறது
நட்சத்திரங்கள் எனக்கு என்பதும்
இருளுக்கு நான் என்பதும்
No comments:
Post a Comment