Sunday, November 6, 2011

மாலை நேரம்

சலனமில்லாத மாலை நேரம்.ஒரு துளி மேகத்தைக் கூட வானத்தில் காண முடியவில்லை.கண்ணுக்கு எட்டுகிற தூரம் வரை ஒரு கட்டிடமும்,மனிதர்களும் இல்லை.ஆங்காங்கே ஓரிரு மரங்கள் காட்சிக்கு தெரிகின்றன.ஆனால் அதன் ஒரு இலையைக் கூட காற்று அசைக்கவில்லை.ஒரு புகைப்படம் போலதான் காட்சி கண்களுக்கு தெரிகின்றது.என் முதுகுக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருக்கிறான்.ஒருவிதமான மங்கலான மஞ்சள் வெளியில் சிறு சிறு துகள்கள் புழுதியாக காட்சி கண்களின் வழியே மனதிலும் மூளையிலும் பதிந்து கொண்டிருக்கிறது.இருளும் அமைதியும் காட்சிகளாக மாறப் போகும் தருணத்திற்காக மனம் காத்துக் கிடக்கிறது.ஒரு விதமான அழுத்தம் மனமெங்கும் வியாபிக்க ஆரம்பிக்கிறது....

வாழ்க்கையைப் பற்றின நினைவுகளும்,அச்சமும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.


Monday, October 17, 2011

நரகத்திலேயே தங்கி விட்ட நான்

புனித நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ள நரகங்களை
காணும்  பேரிச்சையோடு
சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தேன்

இதிகாசங்களிலும்
புராணங்களிலும்
காட்சி அளித்தது போல் 
சிவன் தோன்றினான்

வரம் வேண்டினேன்
நரகத்திற்குச் சென்றேன்
பரிணாம  மாற்றங்களோடு

எனக்கு நானே சுமையாக
என்னை நானே சுமக்கும்படிக்கு
என் முதுகில் கூன் இருந்தது

கூனனாக நரகத்திற்குள் நுழைந்தேன்

வெளிச்சமே இல்லாத நரகத்தை
என்னால் அனுபவிக்க முடியவில்லை

மீண்டும் உலகிற்கு வர விரும்பினேன்

நரகத்திற்கும் உலகிற்கும் ஆயிரம் படிகள்

கூனை சுமந்து கொண்டு
உலகிற்கு நடக்க ஆரம்பித்தேன்

என்னை நானே சுமந்து கொண்டு
உலகிற்கு நடக்க ஆரம்பித்தேன்

நரகத்திற்கும்  உலகிற்கும் 
கருங்கற்களால் ஆன ஆயிரம் படிகள்

பிடிமானம்  அற்ற  அந்த ஆயிரம் படிகளில்  
கூனை சுமந்து நான் நடக்கத் துவங்கினேன்
என்னை நானே சுமந்து நடக்கத் துவங்கினேன்

மேல்  படியில் சிவன் இருக்கிறான்

அவனை நோக்கி நடக்கிறேன்

என்னால் இயலவில்லை

நான் சுமை தாங்காமல்
வழுக்கி விழுகிறேன்

என்னுடைய வீழ்ச்சி
ஒருமுறை அல்ல
படிக்கு ஆயிரம் முறை

நான் ஓலமிடுகிறேன்
நான் கதறுகிறேன்
நான் அழுகிறேன்

ஆனாலும்
என்னுடைய கூனையும்
நான் தாங்கும் சுமையையும்
கரைக்க என்னை முடியவில்லை

சிவனும் இறங்கி வந்து
என்னை அழைத்துச் செல்லவில்லை

என்னால் இயலவில்லை

சிவன் இறங்கி வந்து
என்னை அழைத்துச் செல்லவே இல்லை

அவன் வரப்போவதும் இல்லை

நான் நரகத்திலேயே தங்கி விடுகிறேன்

இதுவே நான்

Monday, September 26, 2011

From "DEMONS"

It seems,in fact,as though the second half of a man's life is usually made up of nothing but the habits he has accumulated during the first half

Wednesday, September 7, 2011

நான் ஒரு மன நோயாளி

என்னை ஒரு மன நோயாளியாக
பிரகடனப்படுத்துங்கள்

என்னை நீங்கள்
கல்லால் அடித்து கொன்று விடுங்கள்

என்னை நீங்கள் நிர்வாணப்படுத்தி
நான் கதற கதற
என் விதைப்பைகளை அறுத்து எறியுங்கள்

நான் எல்லையில்லா வானத்தை அளக்கும் சிட்டுக்குருவி
நான் மரங்களுக்கிடையில் ஊடுருவி ஒளிரும் சூரியக்கதிர்
நான் கடல் அலைகளின் நுரைகள்
நான் ஒரு பிறப்பில் உடையும் நீர்
நான் ஒரு இறப்பில் எரியும் தீ
நான் புணர்ச்சியில் உள்ளே செல்லும் ஆண்குறி
நான் புணர்ச்சியில் உள் வாங்கும் பெண் குறி

நான் ஒரு மன நோயாளி

நீங்கள் ஒரு நடிகனின்
ரசிகனாக இருப்பீர்கள் என்றால்
நீங்கள் ஒரு அரசியல்வாதியின்
தொண்டனாக இருப்பீர்கள் என்றால்
என்னுடைய வரிகளைப் படிக்காதீர்கள்

நான் ஒரு மன நோயாளி

என் விதைப்பைகைளை அறுத்த பின்னும்
கோபம் தீரவில்லையெனில்
என் மனைவியின் மார்புகளை 
அறுத்து எறியுங்கள்
அவள் பெண்மை பிரபஞ்சத்தில் கரைந்து போகட்டும்

Sunday, August 14, 2011

நூற்றாண்டுகளின் பசி - சாருவின் தேகம் நாவலிலிருந்து

இந்த கவிதை சாருவின் தேகம் நாவலிலிருந்து நான் என் மெய் சிலிர்த்து,உள் மனம் நடுங்கி,ஆன்மா அதிர்ந்து,என் சிறு அறிவால் விவரிக்க முடியாத உணர்வுகளோடு படித்த...படிக்கின்ற...படிக்க போகும் கவிதை.

I do not know if I am breaching any copyright issue here...or may be Charu himself might sue me for publishing his writing in my blog without his permission.But I am publishing this to make all people understand how important it is to celebrate our own writers.

நூற்றாண்டுகளின் பசி

இரைக்காகக்
காத்துக்கொண்டிருக்கும்
வனமிருகம் நான்

நூற்றாண்டுகளின் பசி
என் தேகமெங்கும் தீயாய்
கனன்று கொண்டிருக்கிறது
இரவும் பகலும்
பருவ காலங்களும்
வந்து போகின்றன
என் மௌன உறுமலில்
வனவிருட்சங்கள்
நடுக்கமுற்று சிலிர்க்க
பட்சிகள் ஓலமிடுகின்றன
என் இரை
என்னை நோக்கி
வந்துகொண்டிருப்பது
எனக்குத் தெரியும்
இரையின்
மாமிச வாடை
நாசியைத் துளைக்கிறது
இரையே
விரைந்து வா
உன் குரல்வளையில்
என் பற்கள் பதியும் போது
உன் கண்களில் தெரியும்
பீதியும் உயிர்த்தாபமும்
கண்டு நான்
பரவசம்
கொள்ள வேண்டும்
உன் குருதி நக்கி
என் விடாய் தீர வேண்டும்
உன் மாமிச ருசியின்
ஞாபகம் கொண்டு
வணதேவதைகளிடமும்
விருட்சங்களிடமும்
புலம்புகின்றேன்
அதைக் கேட்டு
வனதேவதைகளில் ஒன்று
சொன்னது நான்தான் உன்
இரையென
உன் மாமிச வாடையறிந்த
எனக்கா தெரியாது
தேவதைகளின் தந்திரம்
அவ்விடம் அகன்று
மலையடிவாரம் வந்தேன்
நட்சத்திரங்களுக்குக் கதை
சொல்லிக்கொண்டிருந்த
ஆதிக்கிழவியொருத்தி
என்னை நிறுத்தி
என் முன் ஜென்மத்து
ஞாபகப் படுக்கையில்
கிடத்தினாள்
கடும்பாலையில்
தனிமை கொண்டிருக்கும்
சர்ப்பம்
வானிலிருந்து வீழுமொரு
தாரகை
செம்பருத்தி மலர்
எருமையின் முதுகுப் புண்ணில்
நெளியும் புழு
தர்மனைத் தொடரும் நாய்
தீர்கதரிசியை முத்தமிட்டுக்
காட்டிக் கொடுப்பவன்
மகனால் ஆண்குறி அறுத்தெரியப்பட்டுக்
கதறும் ஓரணோஸ்
ராணி புணர்ந்த புரவி
ஆணை அடித்த பாகன்
சமரிலே புறமுதுகிட்டு ஓடும்
படைவீரன்
கலவியறியாத நிதம்பம்
உறங்கியறியாத அக்கினி
பெயர் அறியாத பித்தனென
எத்தனைஎத்தனையோ
கண்டு வீறிட்டலறி
ஞாபக இரைச்சல்
துரத்தி வர
மாறுவேடம் பூண்டு
வனத்தின் இருளில்
கரையலானேன்
இரையே
என்னை அடையாளம்
கண்டு கொள்
என் மனம் சுவாசித்து...


Thursday, July 28, 2011

மற்றும் அனைத்து ஆன்மாக்களையும்

மற்றும் அனைத்து ஆன்மாக்களையும்
படைத்த இறைவனே
இந்த ஆன்மாவையும் படைத்தான்

ஆனாலும்
இந்த ஆன்மா மட்டும்
உன்னதமானதாக உருப்பெற்றது
படைப்பின் புரியாத ரகசியமே

மற்ற ஆன்மாக்கள்
மற்ற ஆன்மாக்களை கற்பழித்த போது
மற்ற ஆன்மாக்கள்
மற்ற ஆன்மாக்களை காயடித்த போது
இந்த ஆன்மா மட்டும் கசிந்தது

மற்ற ஆன்மாக்கள் பசித்திருந்தபோது
மற்ற ஆன்மாக்கள் மரணித்தபோது
இந்த ஆன்மா மட்டும் கசிந்தது

இந்த ஆன்மா
இதனாலலேயே
இறைவனின் இருப்பு மேல்
ஐயம் கொண்டது

இறைவனை விமர்சிக்க ஆரம்பித்தது
இறைவனை இல்லை என்றது

மற்றும் கூடின மற்ற ஆன்மாக்கள்
இந்த உன்னத ஆன்மாவையை விமர்சிக்க
இருப்பை இல்லாமலாக்க
நிர்வானபடுத்த
கொட்டைகளை அறுக்க
குறியை நெருப்பில் காய்ச்ச

இறந்தது உன்னத ஆன்மா நிர்வாணத்தில்

விழித்து எழுந்தது இறைவனின் மடியில்

கேள்வி:
உன்னத ஆன்மாவை சிதைக்க??????
உன்னத ஆன்மாவை வதைக்க?????
ஏன் மற்றும் சில ஆன்மாவை படைத்தீர்????

பதில்:
இறைவனாகிய நான்
ஆன்மாவை படைத்தேன் 
வதைகள் இல்லை
வாதைகள் இல்லை

ஆன்மாக்களாகிய நீங்கள்
இறைவனை படைத்தீர்கள்
வதைகள் உண்டு
வாதைகள் உண்டு



Wednesday, July 13, 2011

உன்னுடன் ஆன என்னுடைய உறவு

உன்னுடன் ஆன என்னுடைய உறவு ஒரு சூரிய ஒளி புக முடியாமல் சிறு சிறு கோடுகளாக விழுந்து கொண்டிருக்கும் அடர்ந்த கானகத்தில் பிரமிப்போடு நிற்கும் மனிதனைப் போல உள்ளது.அருவிகளின் பேரிரைச்சலும்,விலங்குகளின் ஓலமும்,பறவைகளின் சப்தமும்,பூச்சிகளின் இடைவிடாத காதுகளை வலிக்கச் செய்யும் சப்தமும்,அலறலும் என மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.வெற்றுடம்போடு நின்று கொண்டிருக்கும் என்னுடைய மார்பில் குளிர் காற்று நெருஞ்சி முட்களைப் போல அவஸ்தையை ஏற்படுத்துகிறது.முதுகெலும்பின் வழியே ஒரு சில்லிப்பு பரவி பின் கழுத்தில் இம்சை கொடுக்கிறது.இலைகளின் வாசமும்,நான் நின்று கொண்டிருக்கும் ஈர சேற்றைப் போன்ற மணலின் வாசமும்,மரப் பட்டைகளின் ஈரமும் இதயத்திலும் நுரையீரலிலும் பரவி என் சுவாசத்தின் வழியே வெளியேறி இந்த காட்டையே உஷ்ணப்படுத்துகிறது.இந்த அச்சம்,பரவசம்,பிரமிப்பு,உடல் வாதை,சுவாசத்தில் சுகம்,இம்சை,அவஸ்தை--இவை அனைத்தும் தான் உன்னுடன் ஆன என்னுடைய உறவு

Sunday, June 19, 2011

அவன் இவன் – மரணத்தின் துயரமும்,துயரத்தின் இரக்கமின்மையும்

விளிம்பு நிலை மனிதர்கள்,இயல்பு மீறிய மனிதர்கள்,மனப்பிறழ்வும்,சமூக வாழ்வின் ஒழுங்கின்மையும்,உறவுகளின் சூன்ய தன்மைகள்,இருப்பின் கொடூரமும்,அவலமும்,வதையும் என வாழ்வின் இருத்தலியல் துயரங்களை தனது படைப்புகள் மூலமாக விவாதிக்கும் ஒரு படைப்பாளியின் புதிய படைப்பு.படத்தின் இறுதி காட்சிகளில் தன்னுடைய சமூகம் மீதான கோபத்தையும்,மரணத்தின் கொடூரத்தையும் வெளிப்படுத்தி இதயத்தில் ஒரு அழுத்தத்தையும்,ஆன்மாவில் கதறலையும் ஏற்படுத்தி விட்டார்.அந்த இறுதி காட்சிகள்.....ஒரு மனிதனுக்கு மரணம் என்பது எவ்வளவு அழுத்தமானது என்பதையும்,அதன் கொடூரமான அவஸ்த்தையையும் இவ்வளவு அழுத்தமாக வெளிப்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

Monday, February 14, 2011

சாத்தான்களும் தேவதைகளும்

ஒரு நெடிய உறக்கத்தில் இருக்கிறேன்

ஆனால்
நான் உறங்குகிறேன் என்பதை
நான் உணருவதில்லை
கனவுகளில் இருந்து விழிக்கும் வரை

நான் எப்போதும்
ஒரே கனவை காண்கிறேன்

கனவிலும்
நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன்
அறையின் அனைத்து
மூலைகளில் இருந்தும்
சாத்தான்கள் என்னை நோக்கி நகர்கின்றன

அவை
என்னை நெருங்கியவுடன்
விழித்துக் கொள்கிறேன்
சத்தமிட்டு தேவதையை அழைக்கிறேன்

சாத்தான்கள் பயந்து ஓடி
அறையின் மூலைகளில்
இருளில் நடுங்கி அமர்ந்து கொள்கின்றன

மறுபடியும் உறங்குகிறேன்
சாத்தான்கள் நெருங்குகின்றன
மறுபடியும் விழிக்கிறேன்
தேவதையை அழைக்கிறேன்
சாத்தான்கள் ஓடி விடுகின்றன

இந்த
சாத்தான்களை விரட்டும் விளையாட்டில்
மனம் திருப்தி கொள்கின்றது

முடிவில்லாமல் விளையாடுகிறேன்
இந்த விளையாட்டை

எப்போதாவது உறக்கம் கலைகிறது
கனவுகளிலிருந்து மீள்கிறேன்

ஆனால்
மனம் இந்த விளையாட்டை
மிகவும் விரும்புகிறது