சமீபத்தில் படித்து சிந்தித்த கட்டுரை.......
கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்
ஏர் மகராசன்
பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Frams) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது. அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் மற்றும் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘அரவாணிகள் கம்யூனிட்டி’ என்ற அடிப்படையில் ‘ஜமாத்’ என்று வழங்கப்படுகிறது.ஆணின் உடல்-உணர்வுகள் பெண்ணின் உடல்-உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்/ஆண் உடல் - உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள்.எல்லோராலும் நினைக்கிற மாதிரி ஓர் ஆணோ அல்லது பெண்ணோ ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென்று ஞானம் வந்து அரவாணியாக மாறிவிடுவதில்லை. (பெரும்பாலான அரவாணிகள் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் என்பதாலும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுதல் என்பது மிகக் குறைவு என்பதாலும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய அரவாணிகளின் மாற்றங்கள் குறித்துப் பேசப்படுகின்றன.) ஆணாகப் பிறந்த அரவாணிகள் குழந்தைப் பருவத்திலேயே பெண் சார்ந்த அடையாளங்களையே விரும்புகின்றனர். பெண்களின் விளையாட்டுக்கள் எனச் சொல்லப் படுகிறவற்றின் மீதே ஈர்ப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வருகிற கதாநாயகி போல ஆடுவதும், வீட்டில் உள்ள பெண்களில் உடைகளான பாவாடை, தாவணி உடுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் அழகு பார்த்துக் கொள்வதிலும், துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு சடை மாதிரி முடியை முடிந்து போட்டுக் கொள்வதைப் போல துண்டை எடுத்துக் கட்டிக் கொள்வதும் கண்களுக்கு மைதீட்டிக் கொள்வதும், வளையல் மாட்டிக் கொள்வதுமாகச் சின்ன வயதிலேயே இவற்றின் மீதெல்லாம் ஈர்ப்பு கொள்கிறார்கள். இம்மாதிரியான செய்கைகளின் போது வீட்டில் உள்ளவர்களோ பக்கத்து வீட்டாரோ உறவினர்களோ கண்டிக்கிறபோது அவர்களுக்குத் தெரியாமல் செய்து கொள்வதில் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பொதுவாகவே இவர்களுக்கு குழந்தைப் பருவ காலத்தில் பசங்களோடு சேருதல் என்பது பிடிக்காது, குழந்தைப் பருவத்தைத் தாண்டத் தாண்ட பெண்போல இருக்க விரும்புதல் அதிகமாகிப் போகிறது என்கிறார்கள். பெண்போல ஆடுவதும், உடை உடுத்திக் கொள்வதும், பேசுவதும் மற்றவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றினாலும், பெண்மையை உணர்கிற மாதிரியும் - தான் பெண் என்பதை யாருக்கோ உணர்த்துகிற மாதிரியும் எதிர்த்தாற் போல இருக்கும் மனம் உணர்த்திக் கொண்டே இருக்குமாம். அந்தப் பருவத்தில் இதுபோன்று இருப்பது வெட்கத்துக் குரிய விசயம் என்று நல்ல பிரஞ்ஞை இருந்ததினால் வெளியில் இதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில் - பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும், வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும், என்னமோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப் பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அந்தப் பருவத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை உணரத் தொடங்கி விடுகிறார்கள். இதைவிட முக்கியமானது ஒவ்வொரு அரவாணியும் தனக்கு முன்பாக - முன்மாதிரியாக இருக்கும் அரவாணியைப் பார்த்த பிறகுதான், அதாவது அரவாணியும் வெளியே வந்து நடமாட முடியும்; உயிர்வாழ முடியும்; பெண்ணாகவும் ஆகிக் கொள்ள முடியும்; புடவை கட்டிக் கொள்ள முடியும் என்கிற அறிவும் முழுமையான பிரஞ்ஞையும் எற்பட்ட பிறகுதான் தன்னையும் ஓர் அரவாணியாக உணரத் தொடங்குகிறார்கள். அரவாணிகளைப் பார்க்கும்போது தொடக்கத்தில் பயமும் வியப்பும் வியப்பும் ஏற்பட்டு நாளாக நாளாக அவர்களோடு பழகும் வாய்ப்புகள் கிடைத்தபிறகு - அவர்களிடம் நிறையப் பேசப் பேச சில விசயங்களை உணர்வதாகச் சொல்கிறார்கள். வெளியில் வந்துவிட்ட அரவாணிகளோடு நெருக்கத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வது தேவையெனக் கருதுகிறார்கள். இத்தகைய சூழல் அதிகமாக வாய்க்கிறபோது, ஒருவிதமான வெறி தொற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் ‘ஆம்பிளை’/ ‘ஆண்” என்கிற அடையாளத்தோடு வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிற போதுதான் அரவாணியாக உணரக் கூடியவர்கள் தங்கள் ‘இருப்பு’ குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தங்களின் அடையாளத்தை எப்படித் தொடர்வது என்று தவிப்பதாக ஆகிவிடுகிறது.சுருக்கமாகச் சொல்வதெனில், இந்தப் பருவத்தில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் ஆகிக் கொள்கிறார்கள். இப்படியாகத் தனக்குள்ளே நிகழக்கூடிய மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்த பிறகு ஆண் தன்மையிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்புகின்றனர். தான் அரவாணி என்பதைத் தெரிந்து கொண்ட ஒருவர் தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திச் சொல்லிக் கொள்ள முன் வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.படித்தவர் - நல்ல வசதியான குடும்பப் பின்னணி சார்ந்தவர் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்து தன்னை அரவாணியாக உணர்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே தான் அரவாணி என்பதைச் சொல்லிக் கொள்ள முன்வருதில்லை. தான் அரவாணி என்பது பிறருக்குத் தெரிந்து விட்டால் குடும்பத்துக்கும் சாதிக்கும் கவுரவக் குறைச்சலாக இருக்கும் என்பதால் மிகச் சிறுபான்மை அளவில்தான் அரவாணியாக வெளியே வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரவாணியாக உணரக் கூடியவர்களில் பெரும்பாலோர் வெளியே வந்து விடுகிறார்கள். இந்நிலையில் பெண்போல இருக்க விரும்பும் ஆணின் செயல்கள்யாவும் பெண்ணாக உணர்வதாக அமைகிற போதும், ஆண் உடலுக்குள் பெண்ணாகச் சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறபோதும் ஒரு முடிவெடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டிற்கு தான் அரவாணி என்பதைச் சொல்வதற்குப் பயந்து போனவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். சில சமயங்கள் அரவாணியாக உணர்ந்தவர்களை வீட்டார்களே அடித்து உதைத்து வீட்டை விட்டே துரத்தி விடுகிறார்கள். ஆக அரவாணியாக மாறிப்போனவர்களைக் குடும்பமும் கை கழுவி விடுகிறது.ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அக்குடும்பத்தாரோடு வாழ முடியாமல் போகிற அவலங்கள் எல்லா அரவாணிகளுக்குமே நேர்ந்து வருகிற கொடுமைகள். வெளி உலகத்திற்கு ஆணாகவும் - தன்னளவில் பெண்ணாகவும் இருப்பது என்பது இரட்டை வேடம் போடுதல் என்பதை உள்ளுக்குள் உணர்ந்தவர்கள் அரவாணியாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் களோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். உடல் தோற்றத்தாலும் பெண்ணாக மாற விரும்புகிறவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெண்ணாக உணரக்கூடிய பெரும்பாலான அரவாணிகள் ஆண் அடையாளத்தை விரும்புவதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்தோ அல்லது சில சடங்கு முறைகளின் மூலமோ ஆணுறுப்பை வெட்டி எறிகிறார்கள். இதன் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் தன்மை அழிந்து போனதாக உணர்கிறார்கள்.தன் குடும்பத்தில் பிறந்த ஒருவர் - தனக்குத் தெரிந்த ஒருவர் அரவாணியாக மாறிடக் கூடாது என்று கருதுகிறார்கள். இது அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படக்கூடியது என்று நடுநிலைத் தன்மையோடு பார்க்க முடியாமல் கலாச்சார அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஓர் அரவாணி இருந்து கொண்டிருப்பது குடும்பத்திற்கு அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் அரவாணிப் பிள்ளைகளை அங்கீகரிப்பதில்லை.குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழல் அரவாணிகளுக்கு ஏற்படுவதால், ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழு வட்டத்தோடு தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வாழ்க்கைக்குள் உறவு முறைகளை வகுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஒவ்வொரு அரவாணியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுகிற அரவாணிகளுக்குத் தண்டனை நிரம்ப உண்டு. பெரும்பாலான குழுக்கள் அரவாணிகளை ஒரு முதலீடாகவே பயன்படுத்தி வருகின்றன. தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்துக் கொள்வதற்கும், பிச்சை எடுத்தல் - பாலியல் தொழில் போன்றவைகளை அரவாணிகள் மேற்கொள்கின்றனர். பாலியல் தொழில் என்பது இவர்களின் விருப்பம் சார்ந்த தொழில் என்பதை விடவும், அவர்களுக்கு அம்மாதிரியான தொழில் மட்டும்தான் செய்ய முடியும் என்கிற நிலைமைகiள் இருக்கின்றபோது சமூகத்தின் பொதுப்புத்தி என்பது அரவாணிகளை பாலியல் தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்பார்வையானது, அறியாமையில் வருவதல்ல; ஏற்கெனவே நிலவுகிற கருத்தியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சியாக வருவது. இம்மாதிரியான மதிப்பீடுகள் தோன்றுவதற்கு அரவாணிகள் நடத்தை முறைகள் காரணமாகச் சொல்லப் படுகின்றன பொது இடங்களில் உலாவுகிற அரவாணிகள் பெண்போல பாவித்துக் கொண்டு - தன்னிடம் இல்லாத பெண் நளினத்தை வலிந்து வருவித்துக் கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.ஒருவர் தன்னை பெண் என்று சொல்கிறாரோ இல்லையோ - ஆனால், தன்னை ஆண் என்று சொல்லிவிடக் கூடாது என உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னை ஒரு ‘ஒம்போது’ என்று சொல்வதை கூட சோகத்திலும் சந்தோசமாய் எடுத்துக் கொள்கிறார்கள். தான் பெண் இல்லைதான்; ஆனாலும் ஆண் என்று பிறர் சொல்லவில்லையே எனச் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பெண் தன்மைக்கான அங்கீகாரமாக அதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த மாதிரி நடந்து கொள்வதால்; ஆண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஊடகமாகப் பார்க்கிறார்கள். இம்மாதிரி அணுகுவதை அரவாணிகளும் விரும்புகிறார்கள். ஏனெனில் ஒருவன் தன் கையைப் பிடிக்கிறான்; மார்பகங்களைப் பார்க்கிறான்; தன்னோடு உறவு கொள்ள விரும்புகிறான் எனில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதினால்தானே அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். ஆக, அரவாணிகளின் இம்மாதிரியான செயல் பாடுகளை ஆண் தன்மையினைத் தூக்கி எறிவதற்கான முயற்சிகளாகக் கருத முடிகிறது.மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக் குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் சூழலில் இந்து மதம் சார்ந்த ஆண் ஆதிக்கம் பேசுகிற தொன்மங்கள் வினையாற்றுகின்றன. இந்து மதம் சிலவற்றைப் புனிதமெனவும் அப்புனிதத்திற்கு மாறாக இருக்கக்கூடிய / விலகி நிற்கக் கூடிய / எதிராக இருக்கக் கூடிய யாவும் தீட்டு என இழிவு படுத்தி வைத்திருக்கிறது. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் சமூகத்தின் பொதுக் கருத்தியல்களாகப் பரப்பப்பட்டிருக் கின்றன. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் ஒன்றுதான் ‘லிங்க மய்ய வாதம்’. தந்தை வழிச் சமூகத்தின் எச்சங்களை இக்கருத்தியல்கள் தாங்கி நிற்பதைப் பார்க்கலாம். ஆண் மேலானவன்; உயர்வானவன்; வலிமையானவன்; ஆளக் கூடியவன்; புனிதமானவன் என்பதாக லிங்க மய்ய வாதம் ஆண் தலைமையை முன்வைக்கும். அதே போல பெண்ணின் யோனி வழிப் புணர்ச்சிதான் இயற்கையானது; அதுதான் புனிதமானது என்ற கருத்தியலும் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. இக்கருத்தியல்கள் அரவாணிகளை எப்படிப் பார்க்கிறது? அரவாணிகள் ஆண்குறியோடு பிறந்திருந்தாலும் ஆண்குறி தனக்கு இருப்பதை விரும்பாதவர்கள். ஏதாவது ஒரு வகையில் ஆண் குறியை அறுத்து எறிந்து புதைத்து விடுகிறார்கள். இதுவே லிங்க மய்ய வாதத்தைத் தகர்க்கும் தன்மை கொண்டது. லிங்க மய்ய வாதத்திற்கு நேர் எதிரான கலகத்தன்மை கொண்டது. இன்னொன்று அரவாணிகளுடனான பாலியல் புணர்ச்சி என்பது யோனி வழிபட்டதல்ல. ஆக, லிங்க மய்ய வாதத்திற்குள் பெண் கீழாக வைக்கப்படுகிறாள். லிங்க மய்ய வாதத்திற்குள் வராத / எதிராக இருக்கும் அரவாணிகள் இழிவானவர்களாகக் கருத்தாக்கம் செய்கிறது. அவ்வாதம், இதன் நீட்சியாகத்தான் அரவாணிகளைக் கேவலமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்காமல் இருப்பதுமான நிகழ்வுகள் அமைகின்றன.அரவாணிகளுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகின்றன. பெரும்பாலான அரவாணிகள் கல்வியைத் தொடர முடியாமலே போகின்றனர். வேலை தேடிச் செல்கிறபோது அவ்வேலைக்கு லாயக்கற்றவர்கள் என ஒதுக்கப் படுகின்றனர். சான்றிதழ்களில் பாலினம் எனக் குறிக்கப்பெறும் இடத்தினில் பெண் என்றோ ஆண் என்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரவாணி எனும் மூன்றாம் பாலினத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. இந்நாட்டில் பிறந்த குடிமக்கள் என்ற நிலையில் கூட அரவாணிகள் நடத்தப்படுவதில்லை. குடும்ப அட்டைகள் வாக்காளர் பதிவுகள் வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் அரவாணிகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டே வருகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற மருத்துவச் சான்றிதழ் கொடுத்தல் மிகவும் அரிதாக இருக்கிறது. ஆகவே அரவாணிகளுக்குச் சட்ட அங்கீகாரம் மிக முக்கியமானதாகப் படுகிறது.இங்கே பெண்களுமே அரவாணிகளைக் கேவலமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பும் பகிர்தலும் குறைந்தளவேனும் கிடைக்கப் பெறும். ஆனால், அரவாணிகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் அமைவதில்லை. ஏனெனில், திருமணம் என்கிற ஒன்று இவர்களுக்கு அமைவதில்லை. பெரும்பாலான ஆண்கள் பாலியல் ஊடகமாகத்தான் அரவாணிகளைப் பார்க்கிறார்களே தவிர, அரவாணியை மனைவியாக / துணைவியாக / வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் பங்காளராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை, அரவாணிகள் திருமண உறவை விரும்பினால் கூட அவர்களை மணந்து கொள்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதற்குக் காரணம், அரவாணிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. சராசரிப் பெண்ணைப் போல தாய்மைப் பேறு அடைய முடியாது. ஏனெனில் அரவாணிகளுக்குக் கர்ப்பப்பையே கிடையாது. இந்தக் கர்ப்பப்பை தான் பெண்ணை அடிமைச் சிறையில் வைத்திருக்க உதவுகிறது. அரவாணிகளோ கர்ப்பப்பை இல்லாமல் இருந்தும் கூட அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மனித இன மறுஉற்பத்தியை அரவாணிகள் செய்ய முடியாது என்பதனாலே அவர்கள் ஒதுக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. பெண்கள் தங்களின் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் கர்ப்பப் பைகளை அறுத்தெறியுங்கள் என்றார் பெரியார். இதைச் சமூகம் ஓரளவேணும் உணரத் தொடங்கினாலும் கூட, கர்ப்பப்பைகளே இல்லாத அரவாணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே கலகமாக அமைந்திருப்பதுதான். ஒரு பெண் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்ந்தால் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை பெண்ணாக வளர்க்காமல் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்த்தால் தன்னுடைய இருபது வயதில் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரவாணிகளின் அடிப்படையையே புரிந்து கொள்ள மறுக்கிறது சமூகம், அரவாணிகளுக்கு உழைப்பே மறுக்கப்படுகிறது; இருத்தலே கேள்விக்குள்ளாகிறது; பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.அரவாணிகளைக் குறித்து தவறான கற்பிதங்களைச் சமூகம் உருவாக்கி வைத்திருந்தாலும், அதை மாற்றிட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அரவாணிகளும் மனிதர்களே என்ற பார்வை மாற்று அமைப்புகள் / இயக்கங்கள் போன்றவற்றில் வந்திருந்தாலும் அரவாணிகள் குறித்த செயல்பாடுகளைப் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களே கையாண்டு வருகின்றன. இத்தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கணக்கு காட்டுவதைத்தான் மேற்கொள்கின்றன என்ற விமர்சனங்கள் பரவலாக உண்டு. அரவாணிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எய்ட்சு தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களையும் - ஆணுறை விநியோகம் தொடர்பான காரியங்களையும் செய்து வருகின்றன. இவ்வேலைகளில் அரவாணிகளே பெரும்பாலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். இம்மாதிரியான வேலைகளும் அரவாணிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளாகி விட்டன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை / மாற்று வேலைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்படும்போதுதான் அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும். அரவாணிகளுக்குச் சொத்துரிமை வழங்குதலும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவதும் கூட அவர்களுக்கான அங்கீகாரமாக அமையும். அரவாணிகள் தனித்த பிறவிகள் அல்ல; மனிதப் பிறவிகள்தான் என்பதை உரத்துச் சொல்லும் காலம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் மனிதர்களைச் சமூகம் புரிந்து கொண்டதாகக் கருத முடியும்.
No comments:
Post a Comment