Wednesday, March 7, 2012

ஒரு முன்னுரை..ஒரு குடிகாரன்...ஒரு முடிக்கப்படாத சிறுகதை


ஒரு முன்னுரை..ஒரு குடிகாரன்...ஒரு முடிக்கப்படாத சிறுகதை


முன்னுரை....

என் நண்பன் அவன் சிறுகதைக்கு முன்னுரை வழங்குவதற்காக மிகப் பெரிய எழுத்தாளனாகிய என்னை அணுகினான். நானும் விளம்பரத்துக்காக ஒத்துக் கொண்டேன். நன்றாக குடித்து விட்டு சிறுகதை எழுத ஆரம்பித்தான்.குடித்து குடித்து எழுதினான்.பாதி போதையில் மட்டையாகி படுத்து எழுதினான்.அவனுடைய குறிப்புகளை தொகுத்து கீழே வழங்கியிருக்கிறேன்.நிறைய எழுத்துப் பிழை,இலக்கணப் பிழை இருக்கும்.ஏனென்றால் இதை எழுதியவன் ஒரு குடிகாரன்.இந்த சிறுகதையில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதுவும் அதன் முடிவும் எனக்குப் புரியவும் இல்லை கிடைக்கவும் இல்லை.இதனை புரிந்து கொள்ளும் facebook,blog வாசகர்களே..தயவு செய்து அடியேனின் அறிவை விருத்தி செய்யுங்கள்.இனி குடிகாரனின் முடிக்கப்படாத சிறுகதை....

சிறுகதை...

அந்த வார இதழின் சிறுகதை பகுதியில் அந்த சிறுகதையையும் அதன் கீழ் இருந்த பெயரையும் பார்த்தவுடன் எனக்கு புரிந்து போனது.அந்த கதையை எனது நண்பன் சீனிவாச செட்டியார் தான் எழுதி இருக்க வேண்டும் என்று.கடைசி கடைசியாக தன்னுடைய ஐம்பதாவது வயதில் முதல் சிறுகதையை முடித்து,அதனை அவர் விரும்பியது போல ஒரு இலக்கியப் பத்திரிகையிலும் வெளியிட்டு விட்டார் என்று நான் முடிவு செய்து விட்டேன்.அப்படி இருக்கும் பட்சத்தில் இந்நேரம் மனிதர் தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருப்பார்.அதனால் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல்,மாலை அலுவலகம் முடிந்து வரும்போது சந்தித்து அவருக்கு பிடித்தமான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாவையும் கையில் திணித்து விட்டு வாழ்த்து சொல்லி விடலாம் என்ற எண்ணத்துடன் என்னுடைய அலுவலகத்துக்கு கிளம்பி விட்டேன்.நான் அலுவலகம் முடித்து விட்டு நமது செட்டியாரை பார்க்க மாலை ஆகி விடுமாதலால், இந்த இடைவெளியல் வாசகர்களாகிய நீங்களும் நமது செட்டியாரை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக அவருடைய சரிதையை சொல்லி விடுகிறேன்.பொறுமையாக அமர்ந்து மாலை வரை பின் வருவனவற்றை படித்துக் கொண்டிருங்கள்.அப்பொழுது தான் நான் மாலையில் செட்டியாரை சந்தித்து வாழ்த்து சொல்லும் போது,உங்களுக்கும்  வாழ்த்து சொல்ல தோன்றும்.

முதலில்,நமது செட்டியாரின் வயது ஐம்பது என்பதாலும்,நான் அவருடைய நண்பன் என்பதாலும்,எனக்கும் ஐம்பது வயது என்று நீங்கள் தவறாக நினைத்து விடக் கூடாது.நான் இன்னும் வரன் தேடிக் கொண்டிருக்கும் முப்பதை தாண்டாத பையன்.பிறகு எப்படி செட்டியார் என் நண்பன்?

எப்படியாவது ஒரு சிறுகதை எழுதி தானும் ஒரு சிந்தனைவாதி ஆக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்று கொள்ளை ஆசை கொண்டிருப்பதாக அன்று நான் ரயிலில் சந்தித்தபோது செட்டியார் கூறியது இன்று இந்த சிறுகதை தலைப்பின் கீழ் அந்த பெயரைப் பார்த்த போது நினைவுக்கு வந்தது.ஏனென்றால் தன் சிறுகதை ஏதோவொரு நாளேட்டிலோ வார ஏட்டிலோ வரும் போது தான் தன்னுடைய புனைப் பெயராக "உயிர் எழுத்தாளன்" என்ற பெயருடன் அந்த சிறுகதையை வெளியிடச் சொல்வேன் என்று அந்த சந்திப்பின் போது செட்டியார் சொல்லியிருந்தார். இன்று அந்த பெயருடன் ஒரு சிறுகதை நான் கையில் வைத்திருக்கும் இலக்கியப் பத்திரிக்கையில் இருப்பதாலும்,இது போன்ற மொக்கைப் பெயர்களை சில மொக்கை மனிதர்களால் மட்டுமே யோசிக்க முடியும் என்பதாலும் இந்த சிறுகதை அவரால் தான்  எழுதப்பட்டிருக்கும்  என்று முடிவுக்கு வந்து விட்டேன்.அது என்ன "உயிர் எழுத்தாளன்" என்று நான் கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே.எனக்கு சொல்லத் தோன்றியதெல்லாம்,"இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வச்சிட்டு அதுக்கு பக்கத்திலேயே நீயும் உட்கார்ந்துக்க.பின்னாடி வர்ற சந்ததியினர் இதப் படிச்சு பயன் பெறட்டும்".மனதில் மட்டுமே இதை நினைத்துக்கொண்டு வெளியில் சிரித்து வைத்தேன்.அவர் கொடுத்த விளக்கம் யாதெனின்,"அதாவது உயிர் எழுத்தாளன் என்பதற்கு அர்த்தங்கள் பல உள.பொதுவான அர்த்தமாக இரண்டு அர்த்தங்களை கொள்ளலாம்.ஒன்று எழுத்தையே உயிராக கொண்டவன்.மற்றொன்று தமிழில் உயிர் எழுத்துக்கள் உள்ளதால்,உயிர் எழுத்தாளன் என்று பெயர் கொண்டவன் தமிழை மிகவும் நேசிப்பவன்  என்றும் கொள்ளலாம்." என்று கூறி முடித்தார்.

இதோடு இந்த மனிதரின் சகவாசத்தை முறித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.அந்த ரயில் AC கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தால்,நீங்கள் எப்படி உங்கள் விதியை நொந்தபடி வேறு வேலை இல்லாமல் இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதனை போலவே நானும் அவரை தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.அப்பொழுது தான் வந்தது இயற்கை உபாதை.அவர் சொல்ல சொல்ல கேட்காமல் முந்தைய ஸ்டேஷனில் நான் சாப்பிட்ட bread omlete குடலைப் பிடுங்கிக் கொண்டு வந்தது.மனிதனுக்கு எந்த போக்கு வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் இந்த வயிற்றுப் போக்கு?அதுவும் பொது இடத்தில்?இதனை விட கொடூரமான தண்டனை மனிதனுக்கு இல்லை.இது போன்ற நேரத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளும் எவரையும் நாம் கேலி செய்யக் கூடாது.அதற்காக அனுசரணை என்ற பெயரில் செட்டியார் எனக்கு கழுவி எல்லாம் விடவில்லை.வயிற்றுப் போக்கின் போது அனுசரணையான செய்கைகள் என்ன என்பதனை விளக்குவது இந்த சரிதைக்கு தேவை இல்லாதது என்பதனால்,அவர் என்னிடம் அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதோடு முடித்துக் கொள்வோம்.ஆக ரயில் போக்கில் போய்க் கொண்டிருந்த நாங்கள் என்னுடைய வயிற்றுப் போக்கினால் நண்பர்கள் ஆனோம்.இதனை தர்க்கம் செய்பவர்களும்,ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும் தயவு செய்து இதனை படிப்பதை நிறுத்தி விட்டு உங்கள் வேலையை பாருங்கள்.தர்க்கம் செய்யாதவர்கள்,ஒரு வயிற்றுப் போக்கின் மூலமாக உருவான நட்பை பற்றி நம்பி மேலும் தொடர்க.

பிறகு மெல்ல இருவரும் பல உலக சமாசாரங்களைப் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.அவர் ஒரு இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்று தலை கீழ் கரணங்கள் போட்டுக் கொண்டிருப்பதாக வருத்தத்துடன் கூறினார்.அதில் என்ன அவ்வளவு கடினங்கள் இருக்கிறதா என்ற என்னுடைய கேள்விக்கு அவர் கூறிய பதில்..

"எல்லோருக்கும் புரிகிறபடிக்கு கதைகள் எழுதுவது சுலபம்.ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போல் கதைகள் எழுதுவது கடினம்"

"ஆனாலும் எல்லோருக்கும் புரிவது போல் ஏன் கதைகளை நீங்கள் எழுதக் கூடாது??"

"அங்கு தான் இருக்கிறது இலக்கிய கதைகளின் சூட்சுமம்.அதாவது,எல்லோருக்கும் புரிவது போல் எழுதி விட்டால் நீ வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய்.முதலில் நீ இலக்கிய எழுத்தாளனாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் யாருக்கும் புரியாத மாதிரி எழுத வேண்டும்" என்று கூறி முடித்து விட்டு என்னை உலகம் தெரியாத அப்பாவி என்றும் எனக்கு இன்னும் இலக்கிய வளர்ச்சி வேண்டும் என்றும் சொல்லி முடித்தார்.அதோடு விட்டாரா மனிதர்.ஒரு இலக்கிய கட்டுரையின் தகுதிகளாக அவர் விளக்கினார்.நானும் பிள்ளையிடம் பாடம் படித்த அப்பனைப் போல அவரிடம் பாடம் கேட்டேன்.அவர் கூறியதாவது..


சாமி நான் மட்டை....அவரோட விளக்கத்துல இல்ல...இந்த mansion house-ல...

இனிமே இது சிறுகதை இல்ல...ஒரு தொடர்கதை :) :) :)

No comments: