Friday, March 26, 2010

சுய அடையாள வெறுப்பு

அவ்வப்போது மனதில் தோன்றும் எண்ணங்களை பதிவு செய்து வைத்து விடுவது உத்தமம்.காலத்தின் சூறாவளிச் சுழலில் இந்த எண்ணங்கள் நிலை கொள்ளாமல் பறந்து விடுகின்றன.ஆனாலும் சில எண்ணங்கள் இதற்கு எதிர்மறையாக காலத்தின் பயண வேகத்தில் வெவ்வேறு தளங்களுக்கும் பயணித்து வலு பெற்று மேலும் புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன.அப்படி வெகு நாட்களை தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சிந்தனைதான்-சுய அடையாள வெறுப்பு.

சுய அடையாள வெறுப்பின் கூறுகளை மனித பரிணாம வளர்ச்சியில் இருந்து ஆரம்பம் கொள்ளலாம்.மத ரீதியான பரிணாம வளர்ச்சி எனக்கு எப்போதும் கற்பனையான ஒன்றாகவே படுகிறது.சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி விதிகள் எவ்வளவோ உண்மை எனப் படுகிறது.இது அறிவியல் கட்டுரை இல்லை என்பதால் மிக ஆழமான அணுகுமுறை தேவை இல்லை.நியாண்டர்தால் மனிதனில் இருந்து ஆரம்பிக்கலாம்.ஆப்ரிக்க காடுகளில் தோன்றுகிற முதல் மனிதனில் இருந்து (பெண் என்று சொல்வார்கள்)மனித இனம் தொடங்கி கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியா வந்து அடைகிறது.உலகெங்கும் பரவும் மனித இனம் நாடோடிகளாய் திரிவதை விட்டு விட்டு ஒரே இடத்தில வசிப்பதன் தேவையை உணர்கிறது.நாகரிகங்கள் உருவாகின்றன.வசிக்கும் இடத்தின் தட்ப வெப்ப நிலையை பொறுத்து உணவு,உடை,உறைவிடப் பழக்கங்கள் அமைகின்றன.கலாச்சார வளர்ச்சி அடைகிறான் மனிதன்.தனக்கு எல்லை வகுத்து கொள்கிறான்.மிருக வாழ்க்கையில் இருந்து வெளியே வருகிறான்.மதங்கள்,கடவுள்கள் உருவாக்கபடுகிறார்கள் மனிதனால்.மதத்தை சார்ந்த பண்டிகைகள்,பழக்கங்கள்,நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இதுவே அவனின் சுய அடையாளாமாக மாறுகிறது.

இந்த சுய அடையாளத்தில் மதத்தை சார்ந்த அடையாளங்களை நான் ஒப்பு கொள்ள விட்டாலும்,உடல் சார்ந்த அடையாளங்களை ஒப்பு கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.என்னுடைய தோலின் நிறம் கருப்பாக இருப்பதற்கு மெலனின் எனப்படும் பிக்மென்ட் குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்களை விட அதிகமாக இருப்பது தான் காரணம்.என்னுடைய உடல் நான் வசிக்கும் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தவாறு தன்னை தயார் படுத்துகிறது.Fair & Lovely,Fairever க்ரீம்களின் தேவை முட்டாள்தனம்.மனித இனத்தின் முதல் மனிதன் ஆப்ரிக்கா நாட்டில் தோன்றியதால் அவன்/அவள் நிச்சயமாக கருப்பாக தான் இருக்க முடியும்.பின் ஏன் இந்த வெள்ளை தோல் மோஹம்?தமிழ் சினிமாவின் கதாநாயகியாக வேண்டுமென்றால்,நீ நிச்சயம் வட இந்தியாவில் பிறந்து வெள்ளை தோல் கொண்டு இருக்க வேண்டும்.தமிழ் பேச தெரிய வில்லை என்றாலும் பரவா இல்லை.கருப்பை நாங்கள் கிண்டல் செய்வோம்.தார் ரோட்டில் தவழ்ந்தியா? என்று எள்ளி நகயாடுவோம்.கருப்பை தலித் மக்களின் அடையாளமாக்குவோம். கருப்பான பெண்களை திருமணம் செய்து கொள்ள மறுப்போம்.
மதம்,சாதி என மனிதன் பிரிந்து கிடக்கும் நிலையில் தோல் நிறத்திலும் பிரிந்து தான் கிடக்கிறான்.கருப்பு தோல் கொண்டவர்கள் வெள்ளை தோல் கொண்டவர்களை விட சமூக அமைப்பில் குறைவானவர்கள் என்பது எவ்வித நியாமுமற்ற தர்க்கம். இதற்கு நாமேதான் காரணம்.நம்முடைய நிறத்தை நாமே வெறுக்கிறோம்.நம்முடைய அடையாளத்தை நாமே எள்ளி நகையாடுகிறோம்.

உணவு பழக்கத்திலும் இதுவே நம்முடைய நிலை.கம்பு,கேழ்வரகு போன்ற தானியங்களை மறந்து பல தலைமுறைகள் கடந்து விட்டோம்.இவற்றின் செரிமான தன்மையோ,பூமியின் வெப்பமான பகுதியில் வாழும் நமக்கு தேவையான உடல் குளிர்ச்சிக்கு இந்த தானியங்கள் உதவுவதையோ எண்ணிப் பார்ப்பது கூட இல்லை.கூழ் குடிப்பது கேவலம்.அது விவசாய மக்களின்,தலித் மக்களின்,நாகரிக வளர்ச்சி அடையாத மக்களின் உணவு.உண்மையில் நாகரிக வளர்ச்சி என்பது என்ன?நகரத்தில் வசித்து,Pizza சாப்பிடுவது தான் நாகரிக வளர்ச்சி அடைந்த மனிதனின் அடையாளமா?

உலகத்தின் எல்லா கலாச்சாரத்திலும் மதத்தை சார்ந்த பண்டிகைகளே பெரும்பாலும் இருக்கின்றன.மற்ற கலாச்சாரங்கள் அசுரனை பகவான் அழித்த நாளை கொண்டாட,உழவை,ஒரு தொழிலை,அதுவும் உணவளிக்கும் தொழிலை கொண்டாடுவது அநேகமாக நமது பொங்கல் பண்டிகையாக தான் இருக்கும்.ஆனால் இத்தகைய தன்மை கொண்ட ஒரு பண்டிகையை நாம் எந்த அளவில் வைத்து இருக்கிறோம்.இதனை மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றி விட்டோம்.உழவர்களில் இஸ்லாமியர்கள்,கிருத்தவர்கள் இல்லையா?நகரத்தில் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் கூட பொங்கலை பண்டிகையாக கருதுவதில்லை.பல நிறுவனங்களில் ஒரு நாள் விடுமுறை மட்டுமே.
உழவின் பெருமையை பாட வார்த்தைகள் போதாது.உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு நசிந்து கிடக்கும் உழவு தொழில் வலிமை பெற வேண்டும்.மனிதனின் பசி பிணி நீங்க வேண்டும்.

மொழி,உடை என நமது சுய அடையாளங்களின் மேல் நாம் கொண்டிருக்கும் வெறுப்பும்,வேற்று மொழி,கலாச்சார மோகமும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.அடுத்த தலைமுறை நமது கலாச்சார பெருமைகளை,தேவைகளை தெரிந்து கொள்ளாமலே போய் விட கூடிய அபாய சூழ்நிலையில் இருக்கிறோம்.

கலாச்சார நாகரிக ஊடாக மனிதனை அடையாளப்படுத்துவது தவறு.உணவு,உடை பழக்கங்கள் அனைத்தும் மனதனின் உடல் அமைப்புக்கு தகுந்தவாறு அமையப் பெறும்.தோலின் நிறத்தை வைத்து மனிதனை கீழ்நிலைப்படுத்துவதை தவிர்ப்போம்.சுய இருப்பில் மகிழ்ச்சி கொள்வோம்.

No comments: