Sunday, May 20, 2012

இருப்பு....

எப்பொழுதும் பண்டிகை விடுமுறைகளில் சொந்த ஊருக்கு வருவது என்னுடைய வழக்கம் தான்.இரைச்சலான நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து இந்த பயணம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும்.நான் வளர்ந்த தெருக்களில் நடப்பது,படித்த பையன்களுடன் கூடி அவர்களுடைய உத்யோக வாழ்க்கை விசாரனைகளுடன் பால்ய நினைவுகளை அசை போட்டபடி அமைதியான இந்த ஊரின் காற்றை சுவாசிப்பதில் வார்த்தைகளால் விளக்க முடியாத மகிழ்ச்சி ஏற்படும்.அதுவும் பண்டிகை காலங்களில் முன் பதிவு செய்திடாமல் இந்த ஊருக்கு வரும் கஷ்டம் இருக்கிறதே.சேர்ந்தார் போல் இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறையாக இருந்து விட்டால் போதும்.பேருந்தில் இடம் கிடைப்பதற்கு கர்ணம் போட வேண்டியிருக்கும்.இப்படி இந்த ஊருக்கு வருவதென்பது மிக சுவாரசியமான விஷயம்.
ஆனால் இன்று காலை ஊருக்கு வந்ததிலிருந்தே எதனாலோ என் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது.ஏதோவொரு துர் நிகழ்ச்சியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போல் அச்சமும்,குழப்பமும் கலந்த நிலையில் புத்தி மெய்யுலகை விட்டு விலகி,ஒரு இயந்திரம் போல சுய நினைவற்று கற்பனையான உலகில் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் ஒரு நிலைக்கண்ணாடி உள்ளது.அது ஒரு ஆளுயர கண்ணாடி.அதன் முன்னால் சென்று நின்றவுடன் அதில் தெரியும் பிம்பமே மொத்த உலகமுமாகி விடும்.அந்த பிம்பதையே கண் கொட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளனும் பார்க்கப்படும் பொருளும் ஒன்றாக கலந்து,சர்வமும் ஒன்றாகி,எல்லைக் கோடுகள் கரைந்து கால வெளியில் சிந்தனையும் உடலும் மிதக்க ஆரம்பிக்கும்.எல்லா செயல்பாடுகளும் சூன்யமாகி மனம் அமைதியாகி விடும்.இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை தியானத்தின் மூலமாக அடையலாம் என்ற போதிலும் எனக்கு ஒரு ஆளுயர கண்ணாடியின் முன் நின்று என்னைப் பார்ப்பதே ஒரு வகை தியானம் என்று தோன்றுகிறது.இன்று எனது மனம் இருக்கும் நிலையில் இந்த தியானம் அவசியமாகப் பட்டதால் அந்த ஆளுயர கண்ணடியின் முன் நிற்கிறேன்.
எனது கண்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.ஆனால் கன்னத்தில்தான் சற்று சதை கூடுதலாக,மூக்கு சற்று தட்டையாக இருக்கிறது.முன் தலையில் முடியின் அடர்த்தி குறைவாக இருக்கிறது.உடலிலும் கை கால்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.எனது கால்களுக்கு கீழிருக்கும் தரையின் சில்லிப்பை உணர்கிறேன்.அந்த தரைக்கு கீழிருக்கும் பூமியின் நில அடுக்குகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கும் என தோன்றுகிறது.புத்தி மெதுவாக என் அடல் அமைப்பைத் தாண்டி என்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த நில அமைப்பை விசாரனை செய்ய ஆரம்பிக்கிறது.அடுக்கின் கீழ் அடுக்காக சென்று கொண்டேயிருக்கும் இந்த பூமியின் அச்சு இப்போது நான் நின்று கொண்டிருக்கும் தரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ?இந்த அச்சோ அல்லது இந்த அடுக்குகளில் ஏதேனும் ஒன்றோ தன்னுடைய வழக்கமான செயல்பாடுகளிலிருந்து விலகினால் நான் இப்போது நிற்கும் இந்த தரையின் ஸ்திரத்தனமையும் இந்த தரையும் இல்லாமல் போகும்.அந்த செயல் மீறலின் பாதிப்புகள் அவ்வளவு தூரம் பயணம் செய்து இந்த தரையை எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம்.என்னுடைய மகனோ,பேரனோ இதே தரையில் நிற்கும் போதெனில்,என்னுடைய வம்சத்தை அழிப்பதற்கான வேலை இப்போது இந்த தரைக்கு கீழே நடந்து கொண்டிருக்கலாம்.
அப்போது மின்னல் போல ஒரு சிந்தனை வெட்டுகிறது.இவ்வாறு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சிந்தனை எங்கிருந்து கிளம்புகிறது.அதன் வடிவம் எவ்வாறிருக்கும்?என் சிந்தனை மெதுவாக புற உலகை விட்டு அக உலகிற்குள் செல்ல ஆரம்பிக்கிறது.என்னுடைய சிந்தனை என்னை விட்டு தொலைந்து போய் விட்டால்,அப்போது நான் என்னவாக ஆகிறேன்?இந்த உடலில் உள்ள விரலை வெட்டினால் வலிக்காமல்,நிர்வாணமாக நிற்கும் போதும் பதறாமல் உணர்வுகளை வென்று கடவுளாக மாறிவிடலாம்.
நான் என்பது யார்?நான் என்னை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறேன்?ஒரு பெயரை சொல்லி அழைக்கும்போது அது என்னுடைய பெயர்தான் என்றெனக்கு எப்படிப் புரிகிறது?இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும்,பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.அந்த பெயர்கள் தொலைந்து போனால் மனிதர்களின்,பொருட்களின் இருப்பு எவ்வாறு நிறுவப்படும்?பெயர்கள் தான் இருப்பா?நான் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பொருள் ஏன் கண்ணாடி என்றழைக்கப்படுகிறது?நம்முடைய சிந்தனையில் கண்ணாடி என்பது ஒரு பிம்பத்தை காட்டும் பொருள் என்று எவ்வாறு நிறுவப்பட்டது?பொருட்களும் அதன் பண்புகளும் அதன் இருப்பும் இந்த உலகத்தில் எவ்வாரு சாத்தியப்படுகிறது?நம்முடைய படிப்பினாலா அல்லது நம்முடைய முன்னோர்களிடமிருந்தா?பெயர்களற்ற உலகம் எப்படி இருக்கும்?அங்கே இருத்தல் என்பது என்ன?.நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?நான் இங்கு இல்லாமல் போனால் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் என்ன வித மாற்றம் ஏற்படும்?கடலில் இருந்து ஒரு துளி இல்லாமல் போனால் என்ன விதமான மாற்றத்தை அந்த கடல் அடைகிறது?ஒரு துளி அதில் சேரும் போதும் என்ன வித மாற்றத்தை அந்த கடல் அடைகிறது?ஒரு மாற்றமும் இல்லையெனில் ஒரு துளியின் பங்கு என்ன?கடல் என்பது என்ன?அந்த துளி சேரும் போதும் தொலையும் போதும் கடல் அப்படியே இருக்கிறது.அந்த துளிக்கு முன்னரே அந்த கடல் அங்கே இருந்திருக்கிறது.அந்த துளிக்குப் பின்னரும் அந்த கடல் அங்கே இருக்கிறது.ஆக எந்த துளியில் கடல் உருவானது?எந்த துளியில் அது இல்லாமல் போகிறது?அதனில் ஒரு துளியாக இருந்து கொண்டு அதன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள முற்படுவதின் சாத்தியம்,பேராற்றல் பொங்கும் பிரபஞ்சத்தின் ஒரு துளியாக இருந்து கொண்டு பிரபஞ்சத்தின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள முற்படும் மனித சிந்தனையை ஒத்திருக்கிறது.நான் இருந்தாலும் இல்லாமல் போனாலும் பிரபஞ்சம் இருக்கும்.அப்போது நான் என்பதன் அர்த்தம் என்ன?இருத்தலின் பொருள் என்ன?
அப்பொழுது “அம்மா அம்மா” என்ற ஒரு ஈனமான குரல் என் சிந்தனைகளை கலைத்தது. நான் அது என்னவென்று என் அம்மாவிடம் கேட்டவுடன்,.மணி பண்ணிரண்டு ஆகி விட்டதென்றும், என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பாஸ்கரன் சாப்பாட்டிற்கு கத்துகிறான் என்றும் அம்மா கூறினாள்.அவனுக்கு கை கால்கள் விளங்காமல் போய் விட்ட விஷயத்தையும்,அவன் மணைவி இறந்து போய் அவனுடைய மகன்கள் அவனை விட்டு விட, அவனுடைய அம்மா தான் அவனுக்கு இப்போது சமைத்து போடுகிறாள் என்றும் கூறினாள்.என் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அவனுடைய வீட்டின் வாயில் தெரியும்.அடிக்கின்ற வெயிலில் காய்ந்து கொண்டிருந்த மொட்டை மாடியில் கால்களை வைத்த உடன் தரையில் ஏறியிருந்த சூட்டினால் பாதங்களில் பொடி ஒட்டியது.அங்கிருந்த ஒரு துணியை விரித்துப் போட்டு அதன் மேல் நின்று கொண்டேன்.அந்த காலத்திலேயே எங்கள் தெருவில் இருந்த ஓரிரு பெரிய வீடுகளில் அதுவும் ஒன்று.மேற்கே பார்த்த வீடு.தெருவில் இருந்து நான்கு கருங்கல் படி வைத்து ஏற்றிக் கட்டிய வாசல்.உச்சி வெயில் பட்டு அந்தப் படிகள் எல்லாம் கொதித்துக் கொண்டிருந்தன.அதில் அமர்ந்திருந்த பாஸ்கரனை பார்த்தேன்.கால்கள் இரண்டும் விழுந்து போயிருந்தன.ஒரே ஒரு கை மட்டும் செயல்படும் நிலையில் இருந்தது.சட்டை ஒன்றும் அணியாமல், அவன் கால்களுக்கு கீழே ஒரே ஒரு துணி மட்டும் போர்த்தப்பட்டிருந்தது.அவன் நிர்வாணமாக கிடந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.அவனுடைய கடந்த காலம் லௌகீக வாழ்க்கையின் உச்சம்.குடியும் கூத்தியாளும் என அவனை கம்பீரமாகப் பார்த்திருக்கிறேன்.அவனுடைய இன்றைய இந்த நிலை மனதைப் பிசகியது.இப்படி கஷ்டப்படுவோம் என்று தெரிந்திருந்தால் அவனுடைய கடந்த காலம் வேறு மாதிரி இருந்திருக்கும்.அல்லது இப்படி தான் அவனுடைய நிகழ் காலமும் வருங்காலமும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவனுடைய கடந்த காலம் அவ்வாறு இருந்திருக்க வேண்டும்.எது எப்படியோ வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் புதிராகவே இருக்கிறது.
மதிய உணவு முடித்து விட்ட பின்னும் அந்த குடைச்சல் மனதில் இருந்து கொண்டே இருந்தது.மாலை நான்கு மணிக்கு தூங்கி எழுந்த போதிலும் அந்த குழப்பம் மட்டும் அகலாமல் அப்படியே இருந்தது.மேற்கில் சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான்.வெயில் தாழ்ந்து கொண்டிருந்தது.சற்று வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து விட்டு வருவதற்காக கிளம்பினேன்.முதலில் மசூதி தெரு வழியாக நான் படித்த பள்ளியைத் தாண்டி எனது நண்பன் சிவா வீட்டுக்குச் சென்றேன்.பள்ளியைக் கடந்த அந்த அரை நிமிடத்தில் வாழ்க்கை இருபது வருடங்கள் சுழன்று வந்தது.ஆசிரியர்களின் முகங்கள் மனதில் வந்து விட்டு மறைந்தன.அவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் எனத் தோன்றியது.அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.எத்தனை நாட்கள் அவர்களைப் பார்த்து நடுங்கியிருப்பேன்?கம்பீரமாக என்னை மிரட்டிய அவர்கள் இன்று மூப்பு எய்தி இருப்பார்கள்.காலியாக கிடந்த அந்த கம்பவுண்டர் வீடு,இறந்து போயிருந்த என்னுடைய தமிழ் ஆசிரியர்,அரண்மனை போன்ற வீட்டில் இருந்து விட்டு வாழ்க்கையின் போக்கில் இன்று ஒண்டுகுடித்தனத்தில் தங்கி இருக்கும் செட்டியார் குடும்பம் என நான் பார்த்த மிக வசீகரமான கம்பீரமான மனிதர்களின் வாழ்க்கை மாற்றம் மேலும் அச்சத்தையும் வாழ்க்கை பற்றின கேள்விகளையுமே என்னுள் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.நான்கு நாட்கள் கழித்து ஊருக்கு கிளம்பும் வரையிலும் பதில் இல்லாத கேள்விகளாலேயே என் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
நகரத்தில் அதிகாலை வந்து இறங்கியவுடன் அதன் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.ஆனால் இந்த அதிகாலையில் சாலையில் ஒன்றும் அவ்வளவு போக்குவரத்து இல்லை.உடற்பயிற்சிக்காக ஓடி ண்டிருப்பவர்கள்,செய்திதாள்களைப் பிரித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள்,பால் போடுபவர்கள்,சாலையை பெருக்கிக் கொண்டிருப்பவர்கள்,தேனீர் கடைகளுக்கு வெளியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் என அதிகாலையில் மரங்களின் கிளைகளுக்கு வெளியில் விழுந்து கொண்டிருந்த சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் சொற்ப மனிதர்களே இருந்தார்கள்.இருட்டில் நிறைய மனிதர்கள் இருக்கலாம்.அது எனக்குத் தெரியவில்லை.
ஆட்டோ ஒன்றைப் பிடித்து பயணப்பட்டேன்.மனிதர்களின் முகங்கள் என்னைக் கடந்து சென்றன.இந்த நகரம் மற்றொரு நாளுக்காக தயராகிக் கொண்டிருக்கிறது.இன்று,இந்த மனிதர்களின் பலரது வீட்டில் அவர்களுக்கு பிடித்தமானவர்கள் இறந்து போகலாம்.பலரது காதலி பிரிந்து போகலாம்.பலர் மேலதிகாரிகளிடம் வசை வாங்கலாம்.பலருக்கு பணம் வரவாகலாம்.ஆந்திராவிலிருந்தோ,பீஹாரிலிருந்தோ பெண்கள் இறக்குமதி செய்யப்படலாம்.பலருக்கு திருமணமாகலாம். அச்சம், மகிழ்ச்சி, துயரம், காமம், நிம்மதி, பொறாமை என ஏதேவொரு உணர்வு நான் பார்க்கும் இந்த முகங்களுக்கு பின் இருக்கிறது.ஆனால் அவர்களின் இருப்பு பற்றி அவர்கள் விசாரணை செய்வதேயில்லை.இங்கு உணர்வுகள் மட்டுமே இருக்கின்றன.காலமும்,வெளியும்,ஸ்தூல உடம்பும் இருப்பைத் தாண்டி இருக்கின்றதென தோன்றுகிறது.