Monday, October 17, 2011

நரகத்திலேயே தங்கி விட்ட நான்

புனித நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ள நரகங்களை
காணும்  பேரிச்சையோடு
சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தேன்

இதிகாசங்களிலும்
புராணங்களிலும்
காட்சி அளித்தது போல் 
சிவன் தோன்றினான்

வரம் வேண்டினேன்
நரகத்திற்குச் சென்றேன்
பரிணாம  மாற்றங்களோடு

எனக்கு நானே சுமையாக
என்னை நானே சுமக்கும்படிக்கு
என் முதுகில் கூன் இருந்தது

கூனனாக நரகத்திற்குள் நுழைந்தேன்

வெளிச்சமே இல்லாத நரகத்தை
என்னால் அனுபவிக்க முடியவில்லை

மீண்டும் உலகிற்கு வர விரும்பினேன்

நரகத்திற்கும் உலகிற்கும் ஆயிரம் படிகள்

கூனை சுமந்து கொண்டு
உலகிற்கு நடக்க ஆரம்பித்தேன்

என்னை நானே சுமந்து கொண்டு
உலகிற்கு நடக்க ஆரம்பித்தேன்

நரகத்திற்கும்  உலகிற்கும் 
கருங்கற்களால் ஆன ஆயிரம் படிகள்

பிடிமானம்  அற்ற  அந்த ஆயிரம் படிகளில்  
கூனை சுமந்து நான் நடக்கத் துவங்கினேன்
என்னை நானே சுமந்து நடக்கத் துவங்கினேன்

மேல்  படியில் சிவன் இருக்கிறான்

அவனை நோக்கி நடக்கிறேன்

என்னால் இயலவில்லை

நான் சுமை தாங்காமல்
வழுக்கி விழுகிறேன்

என்னுடைய வீழ்ச்சி
ஒருமுறை அல்ல
படிக்கு ஆயிரம் முறை

நான் ஓலமிடுகிறேன்
நான் கதறுகிறேன்
நான் அழுகிறேன்

ஆனாலும்
என்னுடைய கூனையும்
நான் தாங்கும் சுமையையும்
கரைக்க என்னை முடியவில்லை

சிவனும் இறங்கி வந்து
என்னை அழைத்துச் செல்லவில்லை

என்னால் இயலவில்லை

சிவன் இறங்கி வந்து
என்னை அழைத்துச் செல்லவே இல்லை

அவன் வரப்போவதும் இல்லை

நான் நரகத்திலேயே தங்கி விடுகிறேன்

இதுவே நான்