Monday, February 14, 2011

சாத்தான்களும் தேவதைகளும்

ஒரு நெடிய உறக்கத்தில் இருக்கிறேன்

ஆனால்
நான் உறங்குகிறேன் என்பதை
நான் உணருவதில்லை
கனவுகளில் இருந்து விழிக்கும் வரை

நான் எப்போதும்
ஒரே கனவை காண்கிறேன்

கனவிலும்
நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன்
அறையின் அனைத்து
மூலைகளில் இருந்தும்
சாத்தான்கள் என்னை நோக்கி நகர்கின்றன

அவை
என்னை நெருங்கியவுடன்
விழித்துக் கொள்கிறேன்
சத்தமிட்டு தேவதையை அழைக்கிறேன்

சாத்தான்கள் பயந்து ஓடி
அறையின் மூலைகளில்
இருளில் நடுங்கி அமர்ந்து கொள்கின்றன

மறுபடியும் உறங்குகிறேன்
சாத்தான்கள் நெருங்குகின்றன
மறுபடியும் விழிக்கிறேன்
தேவதையை அழைக்கிறேன்
சாத்தான்கள் ஓடி விடுகின்றன

இந்த
சாத்தான்களை விரட்டும் விளையாட்டில்
மனம் திருப்தி கொள்கின்றது

முடிவில்லாமல் விளையாடுகிறேன்
இந்த விளையாட்டை

எப்போதாவது உறக்கம் கலைகிறது
கனவுகளிலிருந்து மீள்கிறேன்

ஆனால்
மனம் இந்த விளையாட்டை
மிகவும் விரும்புகிறது