ஒளியைத் தின்ற இருள் ஒன்று
சுவர்கள் இல்லாத
வெளியில் எல்லையற்று
நிரம்பி கிடக்கிறது
அரவங்களின் ஓட்டமும்
கண்கள் மினுக்கும் நாய்களின்
சுவாச சத்தமும் அன்றி
மவுனம் மட்டுமே
ஆக்கிரமிப்பு செய்கிறது அவ்வெளியில்
அங்கு
கைகளை வீசித் தேடுகிறேன்
இதுவரை நான் பார்த்திராத
ஓவியம் ஒன்றை
விரல்கள் இடுக்கில்
கிழிந்து செல்கிறது காற்று
எவனோ காதில் சொல்லிப் போனான்
ஓவியத்தில் நிர்வாணமாய்
பெண் ஒருத்தி இருப்பாள் என்று
காமத்தின் போதையில் தேடுகிறேன்
முலைகளின் சந்துகளில்
வியர்வையின் வாசத்தை
சுவாசம் பிடிக்க
காற்றின் வீச்சம் விரல்களை வீழ்த்துகிறது
இருந்தும் முயன்று கிழிக்கிறேன் காற்றை
ஆனால் எனக்குத் தெரியவில்லை
நான் குருடன் என்று